நிலுவைத் தொகையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த மத்திய அரசு கெடு


நிலுவைத் தொகையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த மத்திய அரசு கெடு
x
தினத்தந்தி 14 Feb 2020 4:24 PM GMT (Updated: 14 Feb 2020 4:24 PM GMT)

தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான பார்திஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் நிலுவைத்தொகை செலுத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

புதுடெல்லி,

பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ள 90,000 கோடிக்கும் அதிகமான கடந்த ஜனவரி 23-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அத்தொகையை முழுமையாகச் செலுத்தவில்லை. இதற்கிடையே, நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏர்டெல், வோடாபோன் உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டார்.  நிலுவைத் தொகையைச் செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிகாரிக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்தார் .  இந்த வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்நிலையில், அலைக்கற்றை பயன்பாடு, உரிமம் உள்ளிட்டவற்றுக்கான தொகையை  நீண்ட காலமாக செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நிலுவைத் தொகையை செலுத்த மத்திய அரசு கெடு விதித்துள்ளது.  வோடாபோன் ரூ.55,000 கோடி, பார்தி ஏர்டெல் ரூ.35,500 கோடியை செலுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி 10 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்கு செலுத்துவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்திருந்தது.

Next Story