காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை; ஜாமியா பல்கலைக்கழகம் அறிவிப்பு


காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை; ஜாமியா பல்கலைக்கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2020 3:00 PM GMT (Updated: 16 Feb 2020 3:00 PM GMT)

டெல்லியில் மாணவர்கள் மீது காவலர்கள் தாக்குதல் நடத்தும் வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை என ஜாமியா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த டிசம்பர் 15ந்தேதி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த போராட்டம் திடீரென வன்முறையாக உருவெடுத்தது.  இந்த சம்பவத்தில் 4 அரசு பேருந்துகள், 2 போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.  ஒரு தீயணைப்பு வாகனம் சேதம் அடைந்தது. 6 போலீஸ்காரர்களும் காயம் அடைந்தனர்.

இதனால் வன்முறையில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போலீசார் கலைத்தனர்.  இதில் 35 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  50 மாணவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  எனினும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என அரசு சார்பில் கூறப்பட்டு வந்தது.  இந்நிலையில், டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக நூலகத்தில் மாணவர்களை போலீசார் தாக்கும் 49 வினாடிகள் ஓடும் வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பல்கலைக்கழகத்தில், எம்.பில். பட்டமேற்படிப்பு பிரிவு உள்ளது.  இது படிக்கும் அறையாக செயல்பட்டு வந்துள்ளது.  இதனிடையே, காவலர்கள் உடையணிந்த சிலர் அதிரடியாக இந்த அறைக்குள் நுழைகின்றனர்.

அவர்கள் அங்கிருந்தவர்களை கடுமையாக தாக்குகின்றனர்.  இதனால் அச்சத்தில் மாணவர்கள் சிலர் தப்பியோடுகின்றனர்.  தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.  இதுபற்றி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜாமியா பல்கலைக்கழக நூலகத்தில் போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்புடைய வீடியோ பரவி வருகிறது என எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் புதிய வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை என தெளிவுப்படுத்தி கொள்கிறோம்.  ஜாமியா ஒருங்கிணைப்பு குழுவுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.  அந்த அமைப்பு எங்களுடைய அதிகாரப்பூர்வ அங்கமும் இல்லை.

டுவிட்டர் கணக்குகள், முகநூல் பக்கங்கள் மற்றும் பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பிற பயனாளர்கள், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பெயரை பயன்படுத்துகின்றனர்.  மக்களிடையே குழப்பம் விளைவிக்கின்றனர்.

எங்களது பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு @jmiu_official ஆகும்.  இதேபோன்று அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம், Jamia Millia Islamia, New Delhi @jmiofficial ஆகும்.  எங்களின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் jamiamilliaislamia_official ஆகும் என தெரிவித்து உள்ளது.

Next Story