தேசிய செய்திகள்

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரெயிலில் சிவபெருமானுக்கு இருக்கை ஒதுக்கீடு வெற்றிகரமாக ஓட படத்துக்கு பூஜை + "||" + Reservation of seats for Lord Shiva on the train

பிரதமர் மோடி தொடங்கி வைத்த ரெயிலில் சிவபெருமானுக்கு இருக்கை ஒதுக்கீடு வெற்றிகரமாக ஓட படத்துக்கு பூஜை

பிரதமர் மோடி தொடங்கி வைத்த  ரெயிலில் சிவபெருமானுக்கு இருக்கை ஒதுக்கீடு  வெற்றிகரமாக ஓட படத்துக்கு பூஜை
பிரதமர் மோடி தொடங்கி வைத்த தனியார் ரெயிலில் சிவபெருமானுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரெயில் சேவை வெற்றிகரமாக இயங்குவதற்காக, சிவன் படத்துக்கு பூஜை செய்யப்பட்டது.
புதுடெல்லி,

இந்திய ரெயில்வேயின் துணை நிறுவனம், இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.). இந்த நிறுவனம் சார்பில் தனியார் ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 தனியார் ரெயில்களை இயக்கி வருகிறது.

இந்நிலையில், ‘காசி மஹா காள் எக்ஸ்பிரஸ்’ என்ற 3-வது தனியார் ரெயிலை இயக்க உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து மத்தியபிரதேச மாநிலம் இந்தூர்வரை இந்த ரெயில் ஓடுகிறது. முதலாவது இரவுநேர தனியார் ரெயில் இதுவே ஆகும்.

இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் வாரணாசியில் தொடங்கி வைத்தார். ரெயிலின் வணிகரீதியிலான ஓட்டம், வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.

இருக்கை ஒதுக்கீடு

ரெயில்வே சேவை தொடக்க விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் காசி மஹா காள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிவபெருமானுக்கு ஒரு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ரெயிலின் வழித்தடம், 3 ஜோதிர்லிங்கங்களை (வாரணாசி-காசி விஸ்வநாதர், உஜ்ஜயின்-மஹா காளஸ்வரர், இந்தூர்-ஓம்காரேஷ்வரர்) இணைத்து செல்வதால், சிவபெருமானின் ஆசி பெறுவதற்காக இப்படி செய்யப்பட்டது.

பி5 பெட்டியில் 64-ம் எண் இருக்கை, சிவபெருமானுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ரெயிலில் ஒரு மேல்படுக்கையில், சிவபெருமானின் புகைப்படங்களை வைத்து ஊழியர்கள் பூஜை செய்தனர். இந்த ரெயில் சேவை வெற்றிகரமாக அமைய வேண்டிக் கொண்டனர்.

இந்த தகவல்களை ஐ.ஆர். சி.டி.சி. நேற்று ஒரு அறிக்கை மூலம் தெரிவித்தது.

ஒருநாள் ஏற்பாடு

அந்த அறிக்கையில், “இது தொடக்க விழாவுக்காக ஒருநாள் மட்டுமே செய்யப்பட்ட ஏற்பாடு. வணிகரீதியான ரெயில் சேவை தொடங்கிய பிறகு இதுபோன்ற இருக்கை ஒதுக்கீடோ, பூஜையோ செய்யப்படாது” என்று கூறப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், இந்த செயல் குறித்து அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார். அரசியல் சட்டத்தின் முகப்புரை புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், பிரதமர் அலுவலக ‘டுவிட்டர்’ பக்கத்தையும் இணைத்துள்ளார்.