தேசிய செய்திகள்

இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓட முயன்ற தமிழக ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை பெங்களூருவில் பரபரப்பு + "||" + Tamil Nadu Rowdy Encounter Shot dead

இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓட முயன்ற தமிழக ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை பெங்களூருவில் பரபரப்பு

இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பி ஓட முயன்ற  தமிழக ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை  பெங்களூருவில் பரபரப்பு
பெங்களூருவில் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்ற தமிழகத்தை சேர்ந்த ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பெங்களூரு, 

கர்நாடக மாநிலம் பெங்களூரு லக்கரேயை சேர்ந்தவர் பரத் என்ற ஸ்லம் பரத். பிரபல ரவுடியான இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். கொலை, கொள்ளை உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பரத் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.

கடந்த 22-ந் தேதி உத்தரபிரதேச மாநிலம் முரதாபாத் பகுதியில் பதுங்கி இருந்த பரத்தை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். அவரை நேற்று முன்தினம் நள்ளிரவு காரில், பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர்.

நேற்று அதிகாலை பீனியா அருகே வந்தபோது அங்கு வந்த மற்றொரு கார், போலீசார் வந்த கார் மீது மோதியது.

தப்பிச்சென்றார்

அதில் இருந்த மர்மநபர்கள், போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனை பயன்படுத்தி ரவுடி பரத், காரில் இருந்து இறங்கி ஓடினார். மேலும் அந்த நபர்கள் போலீஸ்காரர் சுபாஷ் என்பவரை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர். பரத், தனது கூட்டாளிகளின் மற்றொரு காரில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.

இதனை தொடர்ந்து சோழதேவனஹள்ளி அருகே யசருகட்டா மெயின் ரோட்டில் ரவுடி பரத் சென்ற காரை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பரத், தான் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் தினேஷ் பட்டீலை துப்பாக்கியால் சுட்டார். அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சுட்டுக்கொலை

அங்கிருந்த மற்ற போலீசாரை பரத்தும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து தாக்க முயன்றதுடன், துப்பாக்கியாலும் சுட முயன்றனர். இதனால் இன்ஸ்பெக்டர் லோகித் என்பவர் பரத்தை நோக்கி துப்பாக்கியால் 3 முறை சுட்டார். இதில் வயிறு மற்றும் கால்களில் குண்டுகள் துளைத்ததால் அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

பரத்தின் கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் யஷ்சை கொல்ல திட்டம்

சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி பரத், பிரபல கன்னட நடிகர் யஷ் உள்பட பல நடிகர்களையும், அரசியல் கட்சிகளின் பிரமுகர்களையும் கொலை செய்ய திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்தது.