அயோத்தியில் ராமர் சிலை தற்காலிக கோவிலுக்கு மாற்றப்படுகிறது


அயோத்தியில் ராமர் சிலை தற்காலிக கோவிலுக்கு மாற்றப்படுகிறது
x
தினத்தந்தி 1 March 2020 10:00 PM GMT (Updated: 1 March 2020 8:55 PM GMT)

அயோத்தியில் உள்ள ராமர் சிலை தற்காலிக கோவிலுக்கு மாற்றப்பட இருப்பதாக அறக்கட்டளை செயலாளர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்த நிலையில், கோவில் கட்டுமான பணிகளுக்காக ‘ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அறக்கட்டளை சார்பில் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு கோவில் கட்டுவதற்கான பணிகள் வேகமெடுத்து வருகின்றன.

அயோத்தி ராம ஜென்மபூமியில் பிரமாண்ட கோவிலுக்கான கட்டுமான பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த பணிகள் நிறைவடையும் வரை அங்கிருக்கும் ராமர் சிலையை (ராம்லல்லா) பக்கத்தில் ஒரு தற்காலிக கோவில் கட்டி அதில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக அறக் கட்டளை செயலாளர் சம்பத் ராய் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியதாவது:-

ராம ஜென்மபூமியில் ராமர் கோவிலுக்கான கட்டுமான பணிகள் தொடங்குமுன், அங்கிருக்கும் ராமர் சிலையை அருகில் ஒரு தற்காலிக கோவில் கட்டி அதில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களின் வசதிக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்காலிக கோவிலை கட்டி அதில் சிலையை மாற்றுவதற்காக நிர்வாகம் சார்பில் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போது மக்கள் 52 அடி தொலைவில் இருந்து ராமர் சிலையை ஒன்று அல்லது 2 வினாடிகள் தரிசித்து வருகின்றனர். ஆனால் தற்காலிக கோவிலில் சிலையை மாற்றியபின் மக்கள் 26 அடி தொலைவில் நின்று கொண்டு ஒன்று அல்லது 2 நிமிடங்கள் வரை தரிசிக்கலாம். அத்துடன் ஆரத்தி நிகழ்விலும் பங்கேற்கலாம்.

அயோத்தியில் ராமர் கோவிலை இலவசமாக கட்டித்தர எல் அண்டு டி நிறுவனம் முன்வந்துள்ளது. ஆனால் இது தொடர்பாக அறக்கட்டளை கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும். ராமர் கோவிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பே அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. எனவே தற்போது பூமி பூஜை மட்டுமே நடைபெறும். கோவிலின் பிரமாண்ட கட்டுமான பணிகளுக்கான வரைபடம் தயாராகி விட்டது.

கோவில் கட்டும் இடத்தை தொழில்நுட்பக்குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பின்னரே, கட்டுமானப் பணிகளுக்கான தேதியும், பூமி பூஜைக்கான தேதியும் முடிவு செய்யப்படும் என்று சம்பத் ராய் கூறினார்.


Next Story