நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட தயார் நிலையில் சிறை நிர்வாகம்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 19 March 2020 12:12 PM GMT (Updated: 19 March 2020 12:12 PM GMT)

நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட அனைத்து ஏற்பாடுகளையும் சிறை நிர்வாகம் செய்து முடித்து தயார் நிலையில் வைத்துள்ளது.

புதுடெல்லி

நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரை தூக்கிலிட ஹேங்மேன் பவான் ஜலாடுக்கு, தலா 20 ஆயிரம் ரூபாய் வீதம் 80 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நிர்பயா   குற்றவாளிகள் 4 பேரையும் நாளை 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்ற டெல்லி ஐகோர்ட்  உத்தரவிட்டு உள்ளது.  இதையடுத்து, திகார் சிறை எண் 3-ல் குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட அனைத்து ஏற்பாடுகளையும் சிறை நிர்வாகம் செய்து முடித்து தயார் நிலையில் வைத்துள்ளது. 

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் நாளை காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக மீரட்டிலிருந்து ஹேங்மேன் பவானை, திகார் சிறை அதிகாரிகள் பாதுகாப்புடன் டெல்லி அழைத்து வந்தனர். தூக்கிலிடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், தூக்குமேடையை ஜலாட் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நேற்று 4 பொம்மைகளை தூக்கிலிட்டு ஒத்திகையும் நடத்தினார். இந்தியாவிலுள்ள வெகுசில பதிவுபெற்ற ஹேங்மேன்களில் ஒருவரான ஜலாடுக்கு, மாதம்தோறும் 3000 ரூபாய் உதவித்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்நிலையில் நாளை தூக்கிலிடும் பணிக்காக அவருக்கு 80 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 8 மணிலா கயிறுகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

Next Story