நிர்பயா குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றம்; திகார் சிறை வெளியே இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


நிர்பயா குற்றவாளிகளுக்கு  தண்டனை நிறைவேற்றம்; திகார் சிறை வெளியே இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 20 March 2020 2:51 AM GMT (Updated: 20 March 2020 2:51 AM GMT)

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து திகார் சிறைவெளியே இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாடினர்.

புதுடெல்லி

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் பின்னர் உறுதி செய்தன.

மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது. குற்றவாளிகளின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் நிராகரிக்கப்பட்டதையடுத்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

30 நிமிடங்கள் அவர்கள் 4 பேரும் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் இருந்தனர். 4 குற்றவாளிகளின் உடல்களை பரிசோதித்து, அவர்கள் இறந்ததை டாக்டர் பதிவு செய்தார். மக்கள் கூடியதையடுத்து திஹார் சிறை வாசலில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து, சிறை வாசலில் திரண்ட பொதுமக்கள் இனிப்புகள் பரிமாறி கொண்டாடினர்.  தேசியக் கொடியுடன் வந்திருந்த சமூக ஆர்வலர்கள்  ”பாரத் மாதா கி ஜெய்” எனக் கோஷம் எழுப்பிய மக்கள் உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story