கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்ட 3 எம்.பி., 2 எம்.எல்.ஏ.க்கள்


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்: தனிமைப்படுத்திக் கொண்ட 3 எம்.பி., 2 எம்.எல்.ஏ.க்கள்
x
தினத்தந்தி 20 March 2020 11:10 PM GMT (Updated: 20 March 2020 11:10 PM GMT)

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, 3 எம்.பி.க்களும், 2 எம்.எல்.ஏ.க்களும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

புதுடெல்லி,

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இங்கிலாந்தில் இருந்து லக்னோவுக்கு வந்தபோது, கொரோனா அறிகுறி காணப்பட்டது. ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று கொரோனா உறுதி ஆனது.

இதற்கிடையே, அவர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் பா.ஜனதா எம்.பி.யும், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவின் மகனுமான துஷ்யந்த் சிங் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு அவர் நாடாளுமன்றத்துக்கும் சென்றார்.

பின்னரே கனிகா கபூரின் பரிசோதனை முடிவுகள் வெளியானது. இதை அறிந்த துஷ்யந்த் சிங், தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதே விருந்தில் பங்கேற்ற வசுந்தரா ராஜேவும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் துஷ்யந்த் சிங் அருகில் அமர்ந்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையனும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

முன்னதாக, அவர் ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியதாவது:-

இந்த அரசு எங்களை ஆபத்தில் தள்ளுகிறது. தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் சொல்கிறார். ஆனால், மறுபுறம் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. துஷ்யந்த் சிங் பக்கத்தில் நான் இரண்டரை மணி நேரம் அமர்ந்து இருந்தேன். எனவே, நாடாளுமன்ற தொடரை ஒத்திவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுபோல், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர் ராய், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எனவே, இந்த கூட்டத்தொடர் முழுவதும் சபைக்கு வராமல் இருக்க அனுமதி அளிக்கக்கோரி அவர் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தை சபையில் வெங்கையா நாயுடு படித்தார். அதற்கு சபை ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையே, கேரள மாநிலம் காசர்கோடில் கடந்த 15-ந் தேதி ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.க்கள் நெல்லிக்குன்னு, கமருதின் ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதே திருமணத்தில் கொரோனா வைரஸ் நோயாளி ஒருவரும் கலந்து கொண்டதே இதற்கு காரணம்.

அந்த வெளிநாட்டுவாழ் இந்தியர், துபாயில் இருந்து கடந்த 12-ந் தேதி கோழிக்கோடு வந்தார். ஒரு ஓட்டலில் தங்கி விட்டு, மறுநாள் ரெயிலில் காசர்கோடு வந்தார். திருமணத்தில் கலந்து கொண்டார். 17-ந் தேதிக்கு பிறகுதான் அவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. இதை அறிந்து, 2 எம்.எல்.ஏ.க்களும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அந்த நோயாளி தங்கிய ஓட்டலின் சக விருந்தினர்கள் பற்றி சுகாதார அதிகாரிகள் தகவல் திரட்டி வருகிறார்கள்.

Next Story