ஊரடங்கு நீட்டிப்பு 3-ந் தேதி வரை ரெயில் சேவை ரத்து - விமானங்களும் இயங்காது
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அடுத்த மாதம் 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதுவரை அனைத்து வகை பயணிகள் ரெயில்கள் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்களும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரசை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா வைரசிடம் இருந்து தப்பிக்க தனித்து இருப்பது மட்டுமே சிறந்த வழி என்பதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல் படுத்தி உள்ளன.
அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த மாதம் 24-ந் தேதி ஊரடங்கை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அன்றைய தினம் நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். அந்த ஊரடங்கு 14-ந் தேதியுடன் (நேற்று) முடிவடைந்தது.
இந்தநிலையில் நேற்று காலை தொலைகாட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு அடுத்த மாதம்(மே) 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த 21 நாட்கள் ஊரடங்கின்போது நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரெயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஊரடங்கு முடிந்தவுடன் 15-ந் தேதி முதல் ரெயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் தொடர்ந்து பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி பிரீமியம், மெயில், எக்ஸ்பிரஸ், பயணிகள், புறநகர், கொல்கத்தா மெட்ரோ ரெயில், கொங்கன் ரெயில் உள்ளிட்ட பயணிகளுக்கான அனைத்து ரெயில் சேவைகளும் வருகிற (அடுத்த மாதம்) 3-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இந்திய ரெயில்வே மூலம் தினந்தோறும் 9 ஆயிரம் பயணிகள் ரெயிலும், 3 ஆயிரம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக தினசரி இயக்கப்படும் இந்த 12 ஆயிரம் ரெயில்கள் சேவை பாதிக்கப்படும்.
ஆனால் நாடு முழுவதும் சரக்கு ரெயில்கள், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ‘பார்சல்’ சிறப்பு ரெயில்கள் தொடர்ந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டங்களில் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள அனைவருக்கும் டிக்கெட் கட்டணம் முழுவதும் அவர்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும்.
ரெயில் நிலைய கவுண்ட்டர் களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் வருகிற ஜூலை 31-ந்தேதி வரை டிக்கெட்டுக்கான முழுப் பணத்தையும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல அனைத்து சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களும் 3-ந் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story