ஸூம் செயலி பாதுகாப்பானது இல்லை: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை


ஸூம் செயலி பாதுகாப்பானது இல்லை: மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 April 2020 11:34 AM GMT (Updated: 16 April 2020 12:50 PM GMT)

ஸூம் செயலி பாதுகாப்பானது இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால்,  ஐடி துறை உள்பட தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளித்துள்ளது. இந்த சூழலில், ஊழியர்கள் பலர் வீட்டில் இருந்தபடி தங்கள் மேலதிகாரிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடர்பு கொண்டு கலந்துரையாடுகின்றனர்.   

இதனால், ஸூம் என்ற செயலியின் பயன்பாடு தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன்மூலமாக பலர் வீடியோ அழைப்பு மூலமாக ஒரே நேரத்தில் கலந்துரையாட முடியும். அரசு அலுவலக ஊழியர்கள்கூட இந்த செயலியைப் பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் செயலியைப் பயன்படுத்தி 5 லட்சம் கணக்குகள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.  இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி “ஸூம்”செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

ஸூம் செயலியை பயன்படுத்த தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின்றன.  சிங்கப்பூரில், ஆசிரியர்கள் ஸூம் செயலியை பயன்படுத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, தைவான் உள்ளிட்ட நாடுகளிலும் ஸூம் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளன. 

Next Story