அசாமில் இயற்கை எரிவாயு கிணற்றில் தீ விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - பிரதமர் மோடி உறுதி


அசாமில் இயற்கை எரிவாயு கிணற்றில் தீ விபத்து:  பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் - பிரதமர் மோடி உறுதி
x
தினத்தந்தி 10 Jun 2020 2:44 PM GMT (Updated: 10 Jun 2020 2:44 PM GMT)

அசாமில் இயற்கை எரிவாயு கிணற்றில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

புதுடெல்லி,

அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் ஆயில் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரிவாயு சேகரிக்கப்படும் கிணறு ஒன்றில் கடந்த 14 நாட்களாக கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று இந்தக் கிணற்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணி 2 வது நாளாக நீடித்து வருகிறது. எரிவாயு வயல் பகுதியில் துப்புரவு பணிகள் நடைபெற்று வரும் போது தீப்பிடித்ததாக ஆயில் இந்தியா தெரிவித்துள்ளது. எரிவாயு கிணற்றை சுற்றிலும் உள்ள சுமார் 2 கி.மீ பகுதிகளில் வசிக்கும் குறைந்தது 6,000 பேர் வெளியேற்றப்பட்டனர்.

தீ விபத்தால் எண்ணெய் வயலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருந்த வீடு, வயல்கள்  சேதமடைந்துள்ளன.

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மாநில முதல்-மந்திரி சர்பானந்த சோனாவலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story