கொரோனாவை தடுப்பது போல் பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவது அவசியம் - முதல்-மந்திரி எடியூரப்பா


கொரோனாவை தடுப்பது போல் பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவது அவசியம் - முதல்-மந்திரி எடியூரப்பா
x
தினத்தந்தி 27 Jun 2020 12:05 PM GMT (Updated: 27 Jun 2020 12:05 PM GMT)

கொரோனாவை தடுப்பது போல் பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்துவது அவசியம் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூரு அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. 

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. பாதிப்பு அதிகம் உள்ள சில பகுதிகளை நாங்கள் சீல் வைத்து மூடியுள்ளோம். இதனால் மற்ற பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்த மாட்டோம். கொரோனாவை தடுப்பது போல் அதே அளவில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதும் அவசியம்.

பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க நாங்கள் நேர்மையான முறையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். இதுகுறித்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விவாதிக்க இருக்கிறோம். கொரோனாவை தடுப்பதில் ஒட்டு மொத்த நாட்டுக்கும் பெங்களூரு முன்மாதிரியாக திகழ்கிறது. 

கடந்த சில நாட்களாக பாதிப்பு அதிகரித்துள்ளது. இதை தடுக்க அனைவரின் ஒத்துழைப்பும் மிக அவசியம். எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவரும் தங்களின் தொகுதிகளில் கொரோனாவை தடுப்பதில் கவனம் செலுத்தினால், அதை நிச்சயம் தடுக்க முடியும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story