பிரதமரின் கொரோனா நிதிக்கு சீனாவில் இருந்து பணம் பெற்றது ஏன்? - காங்கிரஸ் கேள்வி


பிரதமரின் கொரோனா நிதிக்கு சீனாவில் இருந்து பணம் பெற்றது ஏன்? - காங்கிரஸ் கேள்வி
x
தினத்தந்தி 28 Jun 2020 9:30 PM GMT (Updated: 28 Jun 2020 8:31 PM GMT)

இரு நாடுகளுக்கு இடையே மோதல் இருந்து வரும் நிலையில் பிரதமரின் கொரோனா நிதிக்கு சீனாவில் இருந்து பணம் பெற்றது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

புதுடெல்லி,

லடாக் மோதல் விவகாரத்தில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரசுக்கு பதிலடியாக, சோனியாவை தலைவராக கொண்ட ராஜீவ் காந்தி அறக் கட்டளைக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெற்றதை பா.ஜனதா சுட்டிக்காட்டி இருந்தது.

இதற்கு தற்போது பிரதமர் மோடியின் கொரோனா நிதியை (பி.எம். கேர்ஸ் நிதி) முன்வைத்து காங்கிரஸ் பதிலடி கொடுத்து உள்ளது. இந்த நிதிக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நேற்று குற்றம் சாட்டியது. மேலும் சீனாவை ஏன் ஆக்கிரமிப்பாளர் என மோடி அழைக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய வரலாற்றில் கடந்த 13 ஆண்டுகளில் எந்த கட்சியின் தலைமையும் சீனாவுடன் அதிக தொடர்பு வைத்திருக்கவில்லை. ஆனால் பா.ஜனதா தலைமை கடந்த 2007-ம் ஆண்டு முதல் சீன கம்யூனிஸ்டு கட்சியுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறது. ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, அமித்ஷா ஆகியோர் சீனாவுடன் அதிக பரிமாற்றங்களை வைத்திருந்தனர்.

ராஜ்நாத் சிங் கடந்த 2007, 08-ம் ஆண்டுகளில் சீன கம்யூனிஸ்டு கட்சியுடன் கலந்துரையாடல் நடத்தினார். நிதின் கட்காரி 2011-ம் ஆண்டு சீனாவுக்கு 5 நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். அமித்ஷாவோ கடந்த 2014-ம் ஆண்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் குழு ஒன்றை சீன கம்யூனிஸ்டு கட்சியின் பயிற்சி முகாம் ஒன்றுக்காக அனுப்பி வைத்தார்.

இந்த அரசுக்கு நாட்டின் பாதுகாப்பு முக்கியமில்லை. அவர்களுக்கு நான், எனது என்ற எண்ணமும், ராஜீவ் காந்தி அறக்கட்டளையும்தான் முக்கியம். ஆனால் மிகவும் கவலை தரக்கூடியதும், தேசிய பாதுகாப்புக்கு எச்சரிக்கை விடுப்பதுமான உண்மை என்னவென்றால், பிரதமர் மோடி தனது (தனிப்பட்டதாக தெரிகிறது) கொரோனா (பி.எம். கேர்ஸ் நிதி) நிதிக்கு சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நன்கொடை பெற்று உள்ளார்.

கடந்த மாதம் 20-ந்தேதிக்குள் பி.எம். கேர்ஸ் நிதிக்கு ரூ.9,678 கோடி சேர்ந்துள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் எனவென்றால், சீன படைகள் இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கும் நேரத்திலும், சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமர் மோடி நிதி பெற்று இருக்கிறார். இப்படி சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் நிதியை பெறுவதில் இந்திய பிரதமர் சமரசம் ஆகிறார் என்றால், எப்படி அவர் சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து நாட்டை பாதுகாப்பார்? இதற்கு பிரதமர் மோடி பதில் கூற வேண்டும்.

இதைப்போல பிரதமர் மோடி கடந்த 6 ஆண்டுகளில் 18 முறை சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இருக்கிறார். தற்போது இந்திய பகுதிக்குள் சீனா ஊடுருவி இருக்கிறது. இதில் நாங்கள் சமரசம் கொள்ளமாட்டோம், நாங்கள் சீனாவை வெளியேற்றுவோம் என பிரதமர் கூற வேண்டும்.

அவ்வாறு கூறினால் எதிர்க் கட்சிகள் உள்பட ஒட்டுமொத்த நாடும் அவருக்கு பின்னால் நிற்கும். ஆனால் இன்னும் சீனாவை ஆக்கிரமிப்பாளர் என அவர் கூறாதது ஏன்? இந்த விவகாரத்தில் நாட்டை பிரதமர் தவறாக வழிநடத்துகிறார். இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.

Next Story