சி.பி.எஸ்.இ. பாடங்கள் நீக்கம் இந்த ஆண்டுக்கு மட்டும்தான்: விமர்சனங்களுக்கு மத்திய மந்திரி விளக்கம்


சி.பி.எஸ்.இ. பாடங்கள் நீக்கம் இந்த ஆண்டுக்கு மட்டும்தான்: விமர்சனங்களுக்கு மத்திய மந்திரி விளக்கம்
x
தினத்தந்தி 9 July 2020 10:00 PM GMT (Updated: 9 July 2020 8:17 PM GMT)

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டது, இந்த ஆண்டுக்கு மட்டும்தான் என்று மத்திய மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி, 

சி.பி.எஸ்.இ. கல்வி முறையில், 9 முதல் 12-ம் வகுப்புவரையிலான பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, மேற்கண்ட வகுப்புகளுக்கு என்னென்ன பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற விவரம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதில், குடியுரிமை, மதச்சார்பின்மை உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டதற்கு சில எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை முன்னிறுத்துவதற்காக, இந்த பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் சில பாடங்கள் நீக்கப்பட்டது குறித்து முழுவிவரம் தெரியாமல் சில கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவர்கள் சில குறிப்பிட்ட தலைப்புகளை தேர்ந்தெடுத்து, அதற்கு பொய்யான விளக்கம் கொடுத்து, உணர்ச்சிகளை தூண்டிவிட பார்ப்பதுதான் பிரச்சினையாக உள்ளது.

தேசியவாதம், உள்ளாட்சி நிர்வாகம், கூட்டாட்சி போன்ற மூன்று, நான்கு தலைப்புகள் குறித்து கட்டுக்கதைகள் பரப்ப முடியும். ஆனால், பரவலாக எல்லா தலைப்புகளையும் பார்த்தால், பலதரப்பு பாடங்கள் நீக்கப்பட்டு இருப்பதை உணரலாம்.

பாடத்திட்டத்தை 30 சதவீதம் குறைத்து, மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பதுதான் எங்கள் ஒரே நோக்கம். பல்வேறு நிபுணர்களின் ஆலோசனை மற்றும் சிபாரிசுகளின்படியும், கல்வியாளர்களின் யோசனைகளின்படியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாடங்கள் நீக்க நடவடிக்கை, கொரோனா காரணமாக, இந்த ஒரு தடவைக்கு மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

கல்வி என்பது நமது பிள்ளைகளுக்கு ஆற்றும் புனிதமான கடமை. அதில், அரசியலை கலக்காதீர்கள். அத்துடன், நமது அரசியலை இன்னும் புலமைமிக்கதாக ஆக்குங்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story