மராட்டியத்தில் கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


மராட்டியத்தில் கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 12 July 2020 4:04 PM IST (Updated: 12 July 2020 4:04 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புனே,

மராட்டியத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  மராட்டிய கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி இருந்து வருகிறார்.  நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்திலும், மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் அதிக அளவிலான பாதிப்புகளும் உள்ளன.

மராட்டிய காவல் துறையில் கொரோனா பாதிப்புகளால் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.  6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு உள்ளனர்.  மராட்டியத்தின் புனே மாவட்டத்துக்கு உட்பட்ட 22 கிராமங்கள், பிம்ப்ரி சின்ச்வாட் பகுதிகள் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாளை (13ந்தேதி) முதல் 23ந்தேதி வரை 2 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

தொடர்ந்து மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில், கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  எனினும், கவர்னருக்கு பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கின்றது.

இதுபற்றி கவர்னர் கோஷ்யாரி கூறும்பொழுது, நான் நலமுடனே இருக்கிறேன்.  அதனால், சுய தனிமப்படுத்துதலில் இல்லை.  கொரோனா பரிசோதனைகள் நடந்ததில் எனக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.  அதற்கான அறிகுறிகளும் இல்லை.  நான் தனிமைப்படுத்தி கொண்டேன் என வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

Next Story