கொரோனா நோயாளிகளுக்கு உந்து சக்தியாய் மாறிய நடன கலைஞர் - 102 வயது கடந்தும் துடிப்புடன் வாழும் அதிசயம்


கொரோனா நோயாளிகளுக்கு உந்து சக்தியாய் மாறிய நடன கலைஞர் - 102 வயது கடந்தும் துடிப்புடன் வாழும் அதிசயம்
x
தினத்தந்தி 17 July 2020 4:45 AM IST (Updated: 17 July 2020 1:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா நோயாளிகளுக்கு உந்து சக்தியாய் மாறிய நடன கலைஞர்.

கொல்கத்தா,

“ஐயோ, கொரோனாவா... எனக்கா... என் வாழ்க்கை இனி அவ்வளவுதானா?” என்று அலறி துடிப்பவர்களை இன்றும் பார்க்க முடிகிறது.

அதிலும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு, முதியவர்களை கடுமையாக பாதிக்கிறது, அவர்களின் உயிர்களுக்கும் உலை வைக்கிறது என்பது பரவலான கருத்தாக இருக்கிறது.

ஆனால் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு ஆதர்ச சக்தியாக திகழ்கிற, துடிப்புடன் வாழ்கிற இந்திய நடன கலைஞர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு வயது 102.

அவர்தான் அமலா சங்கர். மேற்கு வங்காளத்தை சேர்ந்த இவர், உலக புகழ் பெற்ற நடன கலைஞராகவும், நடன இயக்குனராகவும் விளங்கிய மறைந்த உதய சங்கரின் மனைவி. இவர் மறைந்த இசைக்கலைஞர் ஆனந்த சங்கர் மற்றும் நடன இயக்குனராக இருந்து நடிகையாக மாறிய மம்தா சங்கரின் தாயார், இசை மேதை பண்டிட் ரவி சங்கரின் அண்ணியும் ஆவார்.

வாழ்நாளில் நூற்றாண்டை கண்டுவிட்ட இந்த மகத்தான நடன கலைஞர் அமலா சங்கர், தனது 90- வயதுகளில் கூட சுறுசுறுப்பாக செயல்பட்டிருக்கிறார். அதற்காக அவருக்கு மேற்கு வங்காள அரசு ‘பங்காவிபூஷண்’ பட்டம் வழங்கி கவுரவித்தது.

1948-ம் ஆண்டு, இவரது கணவர் உதயசங்கர் எழுதி, தயாரித்து இயக்கிய கல்பனா என்ற இந்திப்படத்தில் நடித்தும் உள்ளார். இந்தப் படம் ஒரு நடன கலைஞரின் வாழ்க்கையை மைய இழையாக கொண்டது.

உருகும் மகள் மம்தா

தன் தாயைப்பற்றி பேசும்போதே உருகுகிறார், நடிகை மம்தா சங்கர்.

“அம்மா தனது 92-வது வயதில் ‘சீதா சுயம்வரம்’ நாட்டிய நாடகத்தில் பங்கேற்றார். அதே ஆண்டு வெளியான எனது மறைந்த சகோதரர் ஆனந்த சங்கரின் ‘மிஸ்சிங் யூ’ ஆல்பத்திலும் அம்மாவின் பங்களிப்பு உண்டு. அதில்தான் அவர் கடைசியாக மேடையேறி நடனம் ஆடினார்” என நினைவுகூறுகிறார்.

அமலா சங்கருக்கு ஓவியங்கள் வரைவதிலும், கலைப்படைப்புகளை உருவாக்குவதிலும் ஆர்வம் உண்டாம். அதுபற்றி மம்தா சங்கர் கூறும்போது, “அம்மா தான் உருவாக்கும் ஓவியங்களில் தூரிகைகளை பயன்படுத்துவதில்லை. கை விரல்களைத்தான் பயன்படுத்தி உள்ளார். அவர் விளக்குமாறு மற்றும் நகங்களைக்கூட பயன்படுத்துவார்” என்கிறார்.

ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து, அதுபற்றி ஒரு புத்தகமும் எழுதி இருக்கிறாராம் அமலா சங்கர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வற்புறுத்தலுக்கு பிறகுதான் அவர் அல்மோராவில் உள்ள உதய சங்கரின் நடன நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டாராம்.

தன்னை விட 19 வயது இளையவரான அமலா சங்கரை உதய சங்கர் மணந்தது, ஒரு அழகிய காதல் கதை.

“அம்மா, ஒரு பல்துறை பெண்மணி, பரிபூரணவாதி, அவர் எதைச்செய்தாலும் அதில் அழகியல் இருக்கும்” என்று உருகுகிறார், நடிகை மம்தா சங்கர்.

அமலா சங்கர், சாதாரண பெண் அல்ல, நூற்றாண்டு கடந்தும் வாழ்கிற அவரது வாழ்வே நடனம்தான். அதனால்தான் கலையாய் தொடர்கிறது அவரது காவிய வாழ்க்கை.

Next Story