எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் சச்சின் பைலட் கேவியட் மனு தாக்கல்
ராஜஸ்தானில் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரத்தில் சச்சின் பைலட் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிரான அதிகார மோதலில் துணை முதல்-மந்திரியாக இருந்த சச்சின் பைலட் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது.
மேலும் அவருக்கும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், தங்களை தகுதி நீக்கம் செய்ய கூடாது என கோரி சச்சின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நேற்று நடந்த விசாரணையில், சச்சின் பைலட் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் மீது வருகிற ஜூலை 24ந்தேதி வரை சபாநாயகர் சி.பி. ஜோஷி எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
தொடர்ந்து வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற வெள்ளி கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதேபோன்று ராஜஸ்தான் சட்டமன்றமும் வருகிற ஜூலை 24ந்தேதி வரை பைலட் உள்பட 19 எம்.எல்.ஏ.க்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது என நீதிமன்றம் கேட்டு கொண்டது.
ராஜஸ்தான் ஐகோர்ட்டின் தடை உத்தரவை எதிர்த்து சபாநாயகர் சி.பி. ஜோஷி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதுபற்றிய மனுவில், காங்கிரஸ் கொறடா உத்தரவை மீறிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வெள்ளிக்கிழமை வரை ராஜஸ்தான் ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. சபாநாயகர் உத்தரவில் ஐகோர்ட்டு தலையிட முடியாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து சச்சின் பைலட் தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், சபாநாயகர் சி.பி. ஜோஷி தாக்கல் செய்துள்ள மனு மீது பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை மேற்கொள்ளாமல் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story