இந்தியாவில் 12 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு


இந்தியாவில் 12 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 22 July 2020 11:15 PM GMT (Updated: 22 July 2020 9:29 PM GMT)

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்தை நெருங்கியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் தொடர்ந்து அதிரிகரித்த வண்ணம் இருக்கிறது. கடந்த 7 நாட்களாக கொரோனா தினந்தோறும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவர பட்டியலில், 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 92 ஆயிரத்து 915 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 49 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், இன்னும் 4 லட்சத்து 11 ஆயிரத்து 133 பேர் இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இதே 24 மணி நேரத்துக்குள் கொரோனா புதிதாக 648 பேரின் உயிரையும் பறித்துள்ளது. இதனால் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 732 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து மராட்டியம் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அங்கு 3 லட்சத்து 27 ஆயிரத்து 31 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் 1 லட்சத்து 86 ஆயிரத்து 492 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3-வது இடத்தில் உள்ள டெல்லியில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 96 பேர் இந்த வைரசின் பிடியில் சிக்கியுள்ளனர்.

கர்நாடகாவில் 71,069 பேரும், ஆந்திராவில் 58,668 பேரும், உத்தரபிரதேசத்தில் 53,288 பேரும், குஜராத்தில் 50,379 பேரும், தெலுங்கானாவில் 47,705 பேரும், மேற்குவங்காளத்தில் 47,030 பேரும், ராஜஸ்தானில் 31,373 பேரும், பீகாரில் 28,952 பேரும், அரியானாவில் 27,462 பேரும், அசாமில் 25,382 பேரும், மத்தியபிரதேசத்தில் 24,095 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதிப்பு 20 ஆயிரத்து கீழே உள்ளது.

கொரோனா பாதிப்பை போலவே பலி எண்ணிக்கையிலும் மராட்டியமே முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு 12,276 பேரின் உயிரை கொரோனா காவு வாங்கி இருக்கிறது. டெல்லியில் 3,690 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இந்த நோய்க்கு புதிதாக 74 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது. இதுபோக சில காரணங்களாக விடுபட்டு இருந்த 444 கொரோனா மரணங்களும் நேற்றைய பலி எண்ணிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,144 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத்தில் 2,196 பேரும், கர்நாடகாவில் 1,464 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,229 பேரும், மேற்குவங்காளத்தில் 1,182 பேரும் இந்த வைரசின் பிடியில் சிக்கி தங்கள் உயிரை இழந்துள்ளனர். மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளது.

Next Story