கொரோனாவால் நடந்த அதிசயம்: 33 ஆண்டுகளாக 10-ம் வகுப்பில் பெயில் ஆக வந்த நபர் 51 வயதில் பாஸ் ஆனார்!


கொரோனாவால் நடந்த அதிசயம்: 33 ஆண்டுகளாக 10-ம் வகுப்பில் பெயில் ஆக வந்த நபர் 51 வயதில் பாஸ் ஆனார்!
x
தினத்தந்தி 30 July 2020 4:26 PM GMT (Updated: 30 July 2020 4:26 PM GMT)

ஐதரபாத்தில் 33 ஆண்டுகளாக10 ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் பெயிலாகி வந்த 51 வயது நபர் கொரோனாவால் தேர்வாகி உள்ளார்.

ஐதராபாத்,

கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகள் அனைத்தும் நடைபெறவில்லை. அனைத்து மாநிலங்களும் 10 ம்வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பிளஸ் 1-ல் எந்த குரூப் கிடைக்கும் என்பதில் மாணவர்களுக்கு குழப்பம் நீடிக்கிறது. அதே நேரத்தில் 33 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் பெயிலாகி வந்த தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 51 வயது நபர் இந்த கொரோனாவால் ஆல் பாஸ் ஆகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நூருதீன் (வயது 51). இவர் கடந்த 1987 ம் ஆண்டு 10 ம் வகுப்பு பொது தேர்வை எழுத துவங்கினார். அப்போது எழுதிய தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. அன்றிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் விடாமுயற்சியாக தேர்வுக்கு விண்ணப்பித்து, விண்ணப்பத்து தேர்வு எழுதி வந்தார்.  பாஸ் ஆவதற்கு தேவையான 35 மார்க்குக்கு பதிலாக 33,34 என பெற்று தோல்வியையே தழுவி வந்தார்.

இந்தநிலையில் இந்தாண்டும் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த போது அனைத்து பாடங்களையும் எழுத வேண்டும் என அதிகாரிகள் கூறி விட்டனர். அதனை ஏற்று அனைத்து பாடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் செலுத்தி விட்டு தேர்வு எழுதும் தேதிக்காக காத்திருந்தார். ஹால் டிக்கெட்டும் வந்து விட்டது. தேர்வு எழுதவும் தயாராக இருந்தார்.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 10 ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் அனைவரும் பாஸ் என தெலுங்கானா அரசு அறிவித்தது. இதனையடுத்து நூரூதினும் ஆல் பாஸ் ஆகிவிட்டார். இதனையடுத்து முதல்-மந்திரி சந்திரசேகரராவிற்கு நன்றி என கூறி உள்ளார்.

நாட்டிலேயே முதன்முறையாக 10 ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவித்தவர் முதல்-மந்திரி சந்திரசேகரராவ் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story