மூணாறு அருகே மண்ணுக்குள் புதைந்த மேலும் 6 உடல்கள் மீட்பு: பலி எண்ணிக்கை எண்ணிக்கை 49 ஆக உயர்வு


மூணாறு அருகே மண்ணுக்குள் புதைந்த மேலும் 6 உடல்கள் மீட்பு:  பலி எண்ணிக்கை எண்ணிக்கை 49 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 Aug 2020 11:15 PM GMT (Updated: 10 Aug 2020 10:18 PM GMT)

மூணாறு அருகே மண்ணுக்குள் புதைந்த மேலும் 6 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

மூணாறு, 

மூணாறு அருகே மண்ணுக்குள் புதைந்த மேலும் 6 பேரின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதி பயங்கர நிலச்சரிவில் 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த 78 பேர் உயிரோடு புதைந்து விட்டனர். இவர்களில் 3 பேர், மேற்கூரை பெயர்த்து கொண்டு உயிர் தப்பினர்.

முதல் நாளான 7-ந்தேதி 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மண்ணுக்குள் புதைந்து மடிந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. 2-வது நாளில் மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டன. 3-வது நாளில் 16 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.


இந்த நிலையில் 4-வது நாளான நேற்று கொட்டும் மழையில் மீட்பு பணி நடந்தது. அப்போது மேலும் 6 உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. இதில் ஒரு தாய் மற்றும் கைக்குழந்தையின் உடல்களும் அடங்கும். அந்த குழந்தை, தாயின் அரவணைப்பில் தூங்கியபடி உயிரிழந்திருக்கிறது. உருக்கமான இந்த காட்சி, காண்போரின் கண்களை குளமாக்கியதோடு நெஞ்சையும் நெகிழ செய்தது.

நேற்றோடு சேர்த்து நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது. மண்ணுக்குள் புதைந்தவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. தோண்ட, தோண்ட பிணங்களாக வந்து கொண்டிருப்பதால் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகரை சேர்ந்தவர்களும் பலியாகினர். அவர்களுடைய குடும்பங்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த நிதியில் இருந்து ரூ.3½ லட்சம் வழங்கினார்.

இதில், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம், ஒருவர் மட்டும் இறந்த குடும்பங்களுக்கு ரூ.25 ஆயிரம், இறுதி சடங்கில் கலந்துகொள்ள அனைத்து உறவினர்களின் போக்குவரத்து செலவுக்கு ரூ.50 ஆயிரம் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பிரித்து வழங்கி ஆறுதல் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர், தெற்கு மயிலோடை ஊராட்சி தலையால்நடந்தான்குளம் பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் முத்துலட்சுமி உயிரிழந்ததை அடுத்து, அவரது பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் நிதி உதவி அளித்தார்.


Next Story