கேரள விமான விபத்து; ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உதவி எண் அறிவிப்பு


கேரள விமான விபத்து; ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் உதவி எண் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2020 7:14 AM GMT (Updated: 11 Aug 2020 8:05 AM GMT)

கேரள விமான விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனாவால் ஊரடங்கு அமலான பின்னர் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் புலம்பெயர் இந்தியர்கள் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

இதேபோன்று கடந்த வெள்ளி கிழமை துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 185 இந்தியர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலம் கோழிக்கோடு அழைத்து வரப்பட்டனர்.  விமானத்தில் பயணிகள் தவிர 2 விமானிகள், 4 பணிப்பெண்கள் என மொத்தம் 191 பேர் இருந்தனர்.

அந்த விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தை தரை இறக்குவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர். அப்போது பலத்த மழை பெய்து கொண்டு இருந்தது.

விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி அருகில் உள்ள 35 அடி பள்ளத்தில் விழுந்தது.  இதில், விமானம் இரண்டாக உடைந்தது.

இந்த விபத்தில் விமானி உள்பட 19 பேர் பலி ஆனார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர்.  அவர்கள் அருகிலுள்ள நகர மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  இதுவரை 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து திரும்பி சென்றுள்ளனர்.

இந்த நிலையில், விமான பயணிகள் அல்லது கேரள விமான விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

அந்த எண்கள்

0483 2719321

0483 2719318

0483 2719493

ஆகியவை ஆகும்.  இந்த எண்களை கொண்டு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Next Story