பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை - ராணுவ மருத்துவமனை அறிவிப்பு


பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை - ராணுவ மருத்துவமனை அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2020 4:27 AM GMT (Updated: 13 Aug 2020 4:27 AM GMT)

பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஆர்.ஆர்.ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதியும், பாரத ரத்னா விருது பெற்றவருமான பிரணாப் முகர்ஜி (வயது 84) கடந்த 9-ந்தேதி இரவு தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள ராணுவத்தின் ஆர்.ஆர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் பிரணாப்பின் மூளையில் ரத்தம் உறைந்திருந்தது தெரியவந்தது.

எனவே இதை அகற்றுவதற்காக பிரணாப் முகர்ஜிக்கு மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவரது மூளையில் இருந்த ரத்தக்கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இருப்பினும் இந்த அறுவை சிகிச்சைக்குப்பின் பிரணாப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு வென்டிலேட்டர் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதை உடனே அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவரது உடல்நிலையை பல்துறை வல்லுனர்கள் அடங்கிய டாக்டர் குழு ஒன்று தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் வெளிவரத் தொடங்கி வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பிராணாப் முகர்ஜியின் உறவினர்கள் இந்த தகவல்களை மறுத்துள்ளனர். இது குறித்து பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி தெரிவித்த போது, தனது தந்தை சீரான உடல்நிலையுடன் நலமாக இருப்பதாகவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Story