டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது - முதல்-மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால்


டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது - முதல்-மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால்
x
தினத்தந்தி 15 Aug 2020 10:54 AM GMT (Updated: 15 Aug 2020 10:54 AM GMT)

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி அரசு சார்பில் இன்று 74-வது சுதந்திரதின விழா இன்று தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரி  அரவிந்த் கேஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். வழக்கமாக சத்ராசல் அரங்கில் நடக்கும் சுதந்திரதினவிழா, கொரோனா வைரஸ் பரவல் காரணமா தலைமைச் செயலகத்துக்கு மாற்றப்பட்டது.

பின்னர் சுதந்திரதின விழாவில் முதல்-மந்திரி அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:-

கடந்த இரு மாதங்களோடு ஒப்பிடுகையில் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த மத்திய அரசு, அரசு துறைகள், கொரோனா பணியாளர்கள் பல்வேறு அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கொரோனாவில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள் வீட்டுக்குச் சென்றபின்பும் சுவாசிப்பதில் பெரும் சிரமம் இருப்பதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்த வாரத்திலிருந்து ஆக்ஸிஜன் அளிக்கும் திட்டத்தை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு செயல்படுத்த இருக்கிறோம்.

ஆம் ஆத்மி அரசைப் பொறுத்தவரை பள்ளிக் குழந்தைகளின் உடல்நலன், பாதுகாப்பு மிகவும் முக்கியம். நான் சந்தித்த பலரும் என்னிடம் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் அனைவருக்கும் உறுதியளிப்பது என்னவென்றால், டெல்லியில் கொரோனா தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு அடையாதவரை பள்ளிகள் திறக்கப்படாது.

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பிளாஸ்மா தெரபி சிகிச்சை இரு முறையையும் டெல்லிஅரசுதான் கொண்டு வந்தது. டெல்லியில் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டுவருவது சவாலானது. ஆனால், டெல்லி மக்கள் ஆதரவுடன் மீண்டும் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரும் என நம்புகிறேன். அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

டெல்லியில் கரோனா வைரஸ் தாக்கத்தை விரைவாக குறைத்தது குறித்து உலக நாடுகளே வியப்பாகப் பார்க்கின்றன இதை ஆய்வு செய்ய உள்ளன. ஒவ்வொருவரின் முயற்சியால்தான் இது சாத்தியமாகியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும்போது, டெல்லியில் பெரிய அளவுக்கு தற்போது பாதிப்பை ஏற்படுத்தாமல் கட்டுக்குள் இருந்து வருகிறது. இதற்கு டெல்லியில் வாழும் 2 கோடி மக்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். ஜூன் மாதம் டெல்லியில் கொரோனா தாக்கத்தைப் பார்த்த மக்கள் டெல்லியைவிட்டு சென்றுவிடலாம் என்று அச்சப்பட்டனர். ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது, நிலைமை கட்டுக்குள் இருக்கிறது.

டெல்லியின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேலைவாய்ப்பு உருவாக்குதல், வாட் வரி குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை ரூ.8 வரை குறைப்பு போன்றவற்றை செய்து பொருளதாார வளர்ச்சியை வேகப்படுத்தி வருகிறோம். கொரோனா வைரஸ் மீது கவனத்தைச் செலுத்தும் அதேவேளையில் டெங்கு காய்ச்சல் மீதும் நாம் கவனமாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டைப்போலவே செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுபிரச்சாரம் தொடங்கப்படும்.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

Next Story