கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கோர்ட்டில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல்


கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கோர்ட்டில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 18 Aug 2020 2:56 AM GMT (Updated: 18 Aug 2020 2:56 AM GMT)

கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஆலோசகராக முதன்மை செயலாளர் சிவசங்கர் செயல்பட்டுள்ளார் என கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கொச்சி,

கேரள தங்கம் கடத்தல் விவகாரத்தில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஆலோசகராக முதன்மை செயலாளர் சிவசங்கர் செயல்பட்டுள்ளார் என கோர்ட்டில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். இவர் முதல்-மந்திரி பினராயி விஜயன் அலுவலகத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தார். இந்த தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போதும் உறுதியானது. தங்கம் கடத்தல் சம்பவம் கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை ஏற்படுத்தி விட்டது என்றே கூறலாம்.

துபாயில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில், பெரும் கும்பலே செயல்பட்டது தெரியவந்தது. இந்த விவகாரத்தை விசாரணை அதிகாரிகள் தோண்ட, தோண்ட ஒவ்வொருவராக கைதாகி வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை 20 பேர் கைதாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், கேரள முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம், ஸ்வப்னா சுரேஷ் மிகவும் நெருக்கமாக இருந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு இந்த விவகாரத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஏற்கனவே இதுதொடர்பாக 2 முறை முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை கொச்சி அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து மீண்டும் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, அமலாக்கத்துறை காவலில் உள்ள ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர் ஆகியோர் உடன் இருந்தனர். அந்த சமயத்தில், சுவப்னாவுடன் அவர் மேற்கொண்ட வெளிநாட்டு பயணம், சந்திப்பு குறித்து அதிகாரிகள் கேள்வி கணைகளை தொடுத்தனர். இதில் சிவசங்கருக்கும், ஸ்வப்னா சுரேசுக்கும் நெருக்கம் அதிகமாக இருந்ததை ஒப்புக் கொண்டனர்.

2017-ம் ஆண்டு இருவரும் சேர்ந்து துபாய்க்கு சென்றுள்ளனர். பின்னர் 2018-ம் ஆண்டு ஓமனுக்கு சென்ற சிவசங்கர், ஸ்வப்னாவை சந்தித்து சில நாட்கள் இருவரும் ஒன்றாக அறையில் தங்கி உள்ளனர். தொடர்ந்து, மீண்டும் கேரளா திரும்பிய போது ஸ்வப்னா சுரேஷையும் உடன் அழைத்து வந்துள்ளார். 3-வது முறையாக 2018-ம் ஆண்டு வெள்ள நிவாரண நிதி சேகரிக்க முதல்-மந்திரி மற்றும் மந்திரிகள் துபாய் சென்ற போதும் அவர்கள் சந்தித்துள்ளனர். இந்த விவரத்தை அமலாக்கத்துறையினரும் உறுதி செய்தனர்.

மேலும் இதுதொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், கையிருப்பில் இருந்த தங்கத்தை, கணக்கு தணிக்கையாளருடன் இணைந்து வங்கியில் லாக்கர் எடுக்க ஆலோசனையை சிவசங்கர் வழங்கியதாகவும், தங்கம் கடத்தல் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷின் அனைத்து செயல்பாடுகளிலும் ஆலோசகராக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 2018-ம் ஆண்டு இருவரின் வெளிநாடு பயணத்திற்கு பின்னரே தூதரக பார்சல் வழியாக தங்கம் கடத்தல் செயல் திட்டம் தொடங்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story