தேசிய செய்திகள்

ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு - மத்திய அரசு உத்தரவு + "||" + Early Retirement of Corrupt Employees - Central Government Order

ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு - மத்திய அரசு உத்தரவு

ஊழலில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு - மத்திய அரசு உத்தரவு
திறமையற்ற ஊழியர்கள் மற்றும் ஊழலில் ஈடுபடும் ஊழியர்களை முன்கூட்டியே ஓய்வுபெற செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், ஒவ்வொரு துறையின் செயலாளர்களுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அடிப்படை விதிகள் மற்றும் 1972-ம் ஆண்டின் மத்திய சிவில் சர்வீசஸ் (ஓய்வூதிய) விதிகள், ஒரு மத்திய அரசு ஊழியரின் செயல்திறனை ஆய்வு செய்வதற்கும், தேவைப்பட்டால் பொதுநலன் கருதி அவரை முன்கூட்டியே ஓய்வு பெற செய்வதற்கும் அதிகாரம் அளிக்கிறது.


ஆகவே, ஒவ்வொரு அரசு ஊழியரின் பணி பதிவேட்டை முறையாக பராமரிக்க வேண்டும். ஒரு ஊழியர் 50 அல்லது 55 வயதை எட்டி விட்டாலோ அல்லது 30 ஆண்டு பணிக்காலத்தை பூர்த்தி செய்து விட்டாலோ அவரது பணி பதிவேட்டை ஆய்வு செய்ய வேண்டும். அவர் செயல்திறமையற்றவராகவோ அல்லது ஊழல்வாதியாகவோ இருந்தால், பொதுநலன் கருதி, அவரை முன்கூட்டியே ஓய்வுபெற செய்ய வேண்டும்.

இது தண்டனை அல்ல. 1965-ம் ஆண்டின் மத்திய சிவில் சர்வீசஸ் விதிகளில் கூறப்பட்டுள்ள கட்டாய ஓய்வு முறையே தண்டனை ஆகும். அதில் இருந்து இது மாறுபட்டது.

முன்கூட்டியே ஓய்வுபெற செய்ய வேண்டிய அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்கள் முன்கூட்டியே நோட்டீஸ் மூலம் தெரிவிக்க வேண்டும். அல்லது நோட்டீசுக்கு பதிலாக, 3 மாத சம்பளம் மற்றும் படிகளை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் உண்டு. ஆய்வை தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் அவர்களை ஓய்வுபெற செய்ய வேண்டும்.

எந்த ஊழியரின் செயல்திறனாவது திடீரென குறைந்துவிட்டால், அவரின் பணி பதிவேட்டையும் ஆய்வு செய்து ஓய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.