நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - ஆயிரக்கணக்கான முக கவசம், கையுறைக்கு ஏற்பாடு


நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - ஆயிரக்கணக்கான முக கவசம், கையுறைக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 1 Sep 2020 9:36 PM GMT (Updated: 1 Sep 2020 9:36 PM GMT)

நாடாளுமன்றம் கூடுவதையொட்டி, எம்.பி.க்கள் உள்பட 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆயிரக்கணக்கான முக கவசம், கையுறைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. அக்டோபர் 1-ந்தேதி முடிவடைகிறது. மொத்தம் 18 நாட்கள் இத்தொடர் நடக்கிறது. முதல்முறையாக, மக்களவையும், மாநிலங்களையும் இரு வெவ்வேறு ஷிப்ட்களில் நடக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக நீங்காததால், நாடாளுமன்ற வளாகம் முழுவதையும் பாதுகாப்பான மண்டலமாக ஆக்க மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக இரு அவைகளின் செயலாளர்களுடனும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், மத்திய உள்துறை அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அதன்படி, கொரோனா கால கட்டுப்பாடுகளை பின்பற்றி இரு அவைகளும் நடத்தப்பட உள்ளன. சமூக இடைவெளியுடன் இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பு, எம்.பி.க்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மட்டுமின்றி, இரு அவைகளின் ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எல்லா எம்.பி.க்களுக்கும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கொரோனா உபகரண பெட்டி வழங்கப்படும். ஒவ்வொரு பெட்டியிலும் 40 முக கவசங்கள், 5 என்-95 முக கவசங்கள், தலா 50 மி.லி. கொண்ட 20 கிருமிநாசினி பாட்டில்கள், முகத்தை முழுமையாக மறைக்கும் கவசங்கள், 40 ஜோடி கையுறைகள், கதவுகளை தொடாமல் திறக்கவும், மூடவும் பயன்படுத்தப்படும் கருவி, மூலிகை கிருமிநாசினி துடைப்பு கருவி, தேயிலை பாக்கெட்டுகள் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.

எனவே, ஆயிரக்கணக்கான முக கவசங்களும், கையுறைகளும், நூற்றுக்கணக்கானகிருமிநாசினி பாட்டில்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் மொத்தம் 40 இடங்களில் கிருமிநாசினி பாட்டில்கள் வைக்கப்பட்டு இருக்கும். அவற்றை கையால் தொடாமலே பயன்படுத்தலாம். நாடாளுமன்றத்துக்குள் அடிக்கடி கிருமிநாசினி தெளிக்கவும், எம்.பி.க்களின் காலணிகள், கார்கள் ஆகியவற்றுக்கு கிருமிநாசினி தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சபை காவலர்களும் முழுமையான முக கவசம் அணிந்து இருப்பார்கள். நாடாளுமன்றத்துக்குள் நுழைபவர்களை தொடாமலே பாதுகாப்பு சோதனையும், உடல்வெப்ப பரிசோதனையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.பி.க்களும், மத்திய மந்திரிகளும் மட்டும் பிரதான கட்டிடத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் தனி ஊழியர்கள், தனி இடத்தில் அமர வைக்கப்படுவார்கள்.

எம்.பி.க்கள், முக கவசம் அணிந்து, அமர்ந்தபடியே சபாநாயகரை நோக்கி பேச அனுமதிக்கப்படுவார்கள். கிருமி பரவும் அபாயத்தை குறைக்க இப்படி செய்யப்படுகிறது. நாடாளுமன்ற கட்டிடத்தில் நேருக்கு நேர் சந்திக்காதவாறு, எம்.பி.க்களின் நடமாட்டத்தை ஒழுங்குபடுத்துமாறு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் அவசரகால மருத்துவ குழுக்களும், ஆம்புலன்ஸ்களும் எப்போதும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும்.

Next Story