நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது - சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் நடக்கும்


நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது - சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் நடக்கும்
x
தினத்தந்தி 2 Sep 2020 11:45 PM GMT (Updated: 2 Sep 2020 11:42 PM GMT)

வருகிற 14-ந் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட்டம் நடைபெறும்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 1-ந் தேதி வரை இத்தொடர் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மக்களவை செயலகமும், மாநிலங்களவை செயலகமும் நேற்று வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கைகள் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டுள்ளன. அதனால், ஒரே நேரத்தில் இரு அவைகளையும் நடத்த முடியாது. 2 வேளைகளாக இரு அவையும் நடத்தப்படும். முதல் நாளைத்தவிர, மற்ற நாட்களில் காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் கூடும். காலை நேர கூட்டம் 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மாலை நேர கூட்டம் பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் நடைபெறும்.

அதுபோல், எந்த இடைவெளியும் இல்லாமல், சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த கூட்டத்தொடர் நடைபெறும். இத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது. அத்துடன், தனிநபர் மசோதாக்களும் எடுத்துக்கொள்ளப்படாது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, தனிநபர் மசோதாவுக்கென எந்த நாளையும் நிர்ணயிக்க வேண்டாம் என்று சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். பூஜ்ய நேரத்தின் அளவும் குறைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமூக இடைவெளியுடன் இருக்கை மாற்றி அமைக்கப்படுவதும், இரு அவைகளும் வெவ்வேறு நேரத்தில் நடத்தப்படுவதும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுவதும் இதுவே முதல்முறை ஆகும். இதற்கிடையே, கேள்வி நேரத்தை கைவிடுவது பற்றி திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:-

கேள்வி நேரத்தை ரத்து செய்வதன் மூலம் அரசை கேள்வி கேட்கும் உரிமையை உறுப்பினர்கள் இழப்பார்கள். விசேஷமாக கூட்டப்படும் கூட்டத்தொடரில்தான் இப்படி நடப்பது வழக்கம். ஆனால், இது வழக்கமான கூட்டத்தொடர்தான். கொரோனாவின் பெயரில் ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதே சமயத்தில், கேள்வி நேரத்தை ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, டெரிக் ஓ பிரையன், பிஜு ஜனதாதளத்தை சேர்ந்த பினாகி மிஸ்ரா ஆகியோரிடம் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசி விளக்கம் அளித்தார்.

Next Story