விமானப்படையில் ரபேல்; ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ மந்திரி முன்னிலையில் இணைப்பு விழா
எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், அதை சமாளிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன ரபேல் போர் விமானங்கள் நேற்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன.
அம்பாலா,
அண்டை நாடுகளின் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, இந்திய விமானப்படையின் பலத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
இதற்காக பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில் முதல் கட்டமாக 5 ரபேல் விமானங்களை இந்தியாவிடம் பிரான்ஸ் ஒப்படைத்தது. இந்த விமானங்கள் கடந்த ஜூலை மாதம் 29-ந் தேதி அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன.
அடுத்த கட்டமாக 4 ரபேல் விமானங்கள் வருகிற நவம்பர் மாதத்துக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விமானங்களையும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்க பிரான்ஸ் திட்டமிட்டு உள்ளது. ரஷியாவிடம் இருந்து சுகோய் போர் விமானங்களை வாங்கிய 23 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்திய விமானப்படைக்கு புதிதாக போர் விமானங்கள் வாங்கப்பட்டு உள்ளன.
அணுகுண்டுகளையும் சுமந்து சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் ஆற்றல் பெற்ற உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் மணிக்கு 2,130 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் ஏறத்தாழ 3,700 கி.மீ. தூரம் பயணிக்கும்.
விண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்கையும், தரையில் உள்ள இலக்கையும் தாக்கும் வல்லமை பெற்ற ரபேல், எல்லா காலநிலையிலும், எதிரிகளின் ரடாரில் எளிதில் சிக்காமல் பறக்கும் தன்மை கொண்டது. உலகில் பிரான்ஸ், எகிப்து, கத்தார் நாடுகளை தொடர்ந்து, ரபேல் போர் விமானங்களை வைத்துள்ள 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
ரபேல் போர் விமானங்களை முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கும் விழா அம்பாலா விமானப்படை தளத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லி வந்த பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லியை, விமான நிலையத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் வரவேற்றார். விமானநிலையத்தில் பிரான்ஸ் மந்திரிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து அம்பாலா சென்றனர்.
அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் ராஜ்நாத் சிங், பிளாரன்ஸ் பார்லி, இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதுரியா ஆகியோர் முன்னிலையில் அனைத்து மத முறைப்படி வழிபாடு நடத்தப்பட்டு 5 ரபேல் விமானங்களும் முறைப்படி அம்பாலாவில் உள்ள இந்திய விமானப்படையின் 17-வது படைப்பிரிவில் சேர்க்கப்பட்டன. பாதுகாப்பு துறை செயலாளர் அஜய் குமார், அரியானா உள்துறை மந்திரி அனில் விஜ் மற்றும் உயர் அதிகாரிகள் விழாவில் பங்கேற்றனர்.
விமானப்படையில் சேர்க்கப்பட்ட ரபேல் விமானங்கள் விண்ணில் செங்குத்தாகவும், தலைகீழாகவும் பறந்து பிரமிக்கத்தக்க சாகசங்களை நிகழ்த்தின. தரை இறங்கிய அந்த விமானங்களுக்கு, தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு (‘வாட்டர் சல்யூட்’) அளிக்கப்பட்டது.
விழாவையொட்டி தேஜஸ் போர் விமானங்கள், சாரங் ஹெலிகாப்டர்களும் விண்ணில் அணிவகுத்து சாசகங்களை நிகழ்த்தியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகளை ராஜ்நாத் சிங், பிளாரன்ஸ் பார்லி மற்றும் அதிகாரிகள் பார்த்து ரசித்தனர்.
விழாவில் பங்கேற்ற பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லிக்கு ராஜ்நாத் சிங் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
லடாக் எல்லையில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வருவதாலும், படைகளை குவிப்பதாலும், கடந்த சில மாதங்களாக அங்கு பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், ரபேல் போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டு இருப்பது இந்திய விமானப்படைக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவிடம் இருக்கும் போர் விமானங்களை விட ரபேல் திறன் வாய்ந்தது என்பதால், அந்த நாட்டின் அச்சுறுத்தலை சந்திக்க இந்தியா தயார் நிலையில் இருப்பதையே காட்டுவதாக பாதுகாப்பு துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த விழாவில் ராஜ்நாத் சிங் பேசும் போது, சீனாவின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அந்த நாட்டுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அவர் பேசுகையில், எல்லையில் அசாதாரண நிலை நிலவும் சூழ்நிலையில் ரபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இந்திய இறையாண்மையின் மீது கண் வைப்பவர்களுக்கு இது கடுமையான, உறுதியான எச்சரிக்கை என்றும் கூறினார். காலம் மாறிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப நம்மை நாம் தயார்படுத்தி கொண்டுள்ளோம் என்றும், நாட்டின் பாதுகாப்புக்கு பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் அளிப்பது குறித்து தான் பெருமை கொள்வதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
எல்லையில் உள்ள சூழ்நிலை குறித்து கவனம் செலுத்தும் வேளையில், பயங்கரவாத அச்சுறுத்தலையும் நாம் புறக்கணித்துவிட முடியாது என்றும் அப்போது ராஜ்நாத் சிங் கூறினார்.
விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதுரியா பேசுகையில், சரியான நேரத்தில் ரபேல் போர் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
பிரான்ஸ் ராணுவ மந்திரி பிளாரன்ஸ் பார்லி பேசுகையில், ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையேயான வலுவான நட்புறவுக்கு அடையாளமாக விளங்குவதாகவும், இந்த விமானங்களை விமானப்படையில் சேர்த்து இருப்பதன் மூலம் இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு உயரும் என்றும் கூறினார்.
அத்துடன், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு பிரான்ஸ் முழு ஆதரவு அளிக்க உறுதிபூண்டு இருப்பதாகவும், பாதுகாப்பு துறையை பொறுத்தமட்டில் பல பிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுவதாவும், மேலும் பல நிறுவனங்கள் தங்கள் ஆதரவையும், சேவையையும் அளிக்க முன்வரும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story