வரும் செப்.25 -க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்


வரும் செப்.25 -க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 14 Sep 2020 4:57 PM GMT (Updated: 14 Sep 2020 4:57 PM GMT)

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்குக்கு இணையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு இன்றோடு கிட்டதட்ட 173 நாட்கள் ஆகின்றன.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோன வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தொற்று பரவல் கட்டுக்குள் வராவிட்டாலும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஜூன் மாதம் முதல் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் அமலில் உள்ளன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட்டுள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதே வேகத்தில் சென்றால் விரைவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்காவை இந்தியா மிஞ்சினாலும்  ஆச்சர்யப்படுவதற்கில்லை. அந்த அளவுக்கு இந்தியாவில் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் செல்கிறது.

இந்த நிலையில்,   வரும் செப்டம்பர் 25- ஆம் தேதியில் இருந்து மீண்டும் ஊரடங்கு  அமல்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்ததாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியது.  “ நாட்டில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், திட்டமிடல் ஆணையத்துடன் இணைந்து, 46 நாட்கள் தேசிய அளவிலான ஊரடங்கை  செப்டம்பர் 25ஆம் தேதியிலிருந்து அமல்படுத்த  மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறது”  என ஆன்லைனில் பகிரப்பட்ட ஸ்க்ரீன் ஷாட் பதிவில் கூறப்ப்பட்டு இருந்தது. 

ஆனால், இந்த தகவலை முற்றிலும் பத்திரிகை தகவல் ஆணையம் (பிஐபி) மறுத்துள்ளது. இது தொடர்பாக பிஐபி டுவிட்டர் பக்கத்தில் உண்மை நிலை (Fact Check) என்ன என்பது பற்றி அளிக்கப்பட்ட்டுள்ள விளக்கத்தில், ”இந்த அறிக்கை முற்றிலும் போலியானது என பத்திரிகை தகவல் பணியகம்(Press Information Bureau) மறுத்துள்ளது. மேலும் ஊரடங்கை அமல்படுத்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசை எந்தவிதத்திலும் வலியுறுத்தவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story