நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தனிப்பட்ட கருத்து: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கு பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு
நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கோர வேண்டும் என பா.ஜனதாவினர் வலியுறுத்தினர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று வங்கிகள் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய் பேசினார். அப்போது பொருளாதார வீழ்ச்சி குறித்து பேசும்போது, நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை கூறினார்.
இதனால் கடும் கோபமடைந்த ஆளும் பா.ஜனதாஎம்.பி.க்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்தும் சபாநாயகர் நீக்கிவிட்டார். ஆனால் சவுகதா ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜனதா உறுப்பினர்கள், குறிப்பாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியும் வற்புறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறும்போது, ‘சவுகதா ராயின் கருத்துகள் பெண்களை அவமதிக்கும் வகையில் உள்ளது. இது நமது கலாசாரம் அலல. அவர் மூத்த உறுப்பினர். அவர் ஏன் இவ்வாறு பேசினார்?’ என கேள்வி எழுப்பினார்.
சவுகதா ராயின் கருத்துகளுக்கு ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story