இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 83 சதவீதமாக உயர்வு


இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 83 சதவீதமாக உயர்வு
x
தினத்தந்தி 29 Sep 2020 10:09 AM GMT (Updated: 29 Sep 2020 10:09 AM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 83 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 83 சதவீதத்தை தாண்டியது. சிகிச்சையில் உள்ள நபர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 41.5 லட்சம் ஆகும். இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை எதிர்த்து இந்தியா திறம்பட போராடி வரும் நிலையில், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 83 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. சிகிச்சையில் உள்ள நபர்களை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 41.5 லட்சம் அதிகமாகும்

கடந்த ஒரு மாதத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கையில் 100 சதவீத உயர்வை இந்தியா கண்டுள்ளது. மொத்த பாதிப்புகளில் 83 சதவீதம் பேர் (50 லட்சத்துக்கும் அதிகமானோர்) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த பாதிப்புகளில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானவர்களே (10 லட்சத்திற்கும் குறைவாக) தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 84,877 நபர்கள் குணமடைந்துள்ளனர். புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 70,589 ஆக உள்ளது. குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 51,01,397 ஆகும்.

குணமடைந்தோரின் 73 சதவீதம் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், டெல்லி, ஒடிசா, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் உள்ளனர்.

மராட்டியத்தில் மட்டுமே 20,000-க்கும் அதிகமானோர் புதிதாக குணமடைந்துள்ளனர். கர்நாடகாவிலிருந்து 6,000 பேர் குணமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளன.

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story