கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 1 லட்சம் கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை; உலக அளவில் 3-வது இடம்
இந்தியாவில் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து விட்டது. இந்த எண்ணிக்கையை எட்டும் 3-வது நாடாக இந்தியா மாறியிருக்கிறது.
புதுடெல்லி,
உலகின் பல்வேறு நாடுகளைப்போலவே, இந்தியாவும் தொடர்ந்து கொரோனாவின் கொடூர கரங்களில் சிக்கி இருக்கிறது. கடந்த ஜனவரி மாத இறுதியில் முதல் கொரோனா நோயாளியை கேரளாவில் பெற்ற இந்தியா, அதைத்தொடர்ந்து தினமும் புதிய பாதிப்புகளை பெற்று வருகிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் கொரோனாவின் வாழிடமாக திகழ்கின்றன.
இவ்வாறு தீவிரமாக பரவி வரும் கொரோனா, ஏராளமான மரணங்களையும் தினந்தோறும் வழங்கி வருகிறது. இந்தியாவில் முதல் கொரோனா பலி கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்தது. தற்போது நூற்றுக்கணக்கான மக்கள் தினந்தோறும் கொரோனாவால் மடிந்து வருகின்றனர்.
இதில் கடைசியாக நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 1,069 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் நிகழ்ந்துள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து விட்டது. மொத்தம் 1,00,842 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
இதன் மூலம், 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பலியான நாடுகளில் 3-வதாக இந்தியா இணைந்துள்ளது. 2.13 லட்சத்துக்கு அதிகமானோரை பறிகொடுத்த அமெரிக்கா முதலிடத்தையும், 1.45 லட்சத்துக்கு அதிகமானோரை இழந்த பிரேசில் 2-ம் இடத்திலும் உள்ளன.
இப்படி அதிகமான உயிரிழப்புகளை இந்தியா பெற்றிருந்தாலும், உலக அளவில் குறைவான கொரோனா மரண விகிதத்தை கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக நீடிக்கிறது. இந்தியாவின் கொரோனா சாவு விகிதம் 1.56 சதவீதம் ஆகும். அதேநேரம் சர்வதேச பலி விகிதம் 2.97 என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதைப்போல 10 லட்சம் பேரில் 130 மரணங்கள் என்ற சர்வதேச சராசரியை விட மிகவும் குறைவாக, அதாவது 73 இறப்புகள் என்ற சராசரியையே இந்தியா கொண்டிருக்கிறது.
இதற்கிடையே மேற்படி 24 மணி நேரத்தில் மேலும் 79 ஆயிரத்து 476 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரத்து 545 ஆக உயர்ந்திருக்கிறது. இது உலக அளவில் 18.6 சதவீதம் ஆகும்.
இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்புகளில் அதிகபட்சமாக 14 லட்சத்து 16 ஆயிரத்து 513 பேருடன் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக ஆந்திரா (7,06,790) மற்றும் கர்நாடகா (6,20,630) மாநிலங்கள் உள்ளன.
இது ஒருபுறம் இருக்க நாடு முழுவதும் 75 ஆயிரத்து 628 பேர் மேற்படி 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்து 27 ஆயிரத்து 706 ஆக அதிகரித்து இருக்கிறது.
கொரோனாவில் இருந்து அதிகம் பேர் குணமடைந்த நாடுகளில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் 21 சதவீத குணமடைந்தவர்களை இந்தியா பெற்று இருக்கிறது.
தற்போதைய நிலையில் நாடு முழுவதும் 9 லட்சத்து 44 ஆயிரத்து 996 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இது 14.60 சதவீதம் ஆகும். இந்தியாவில் தொடர்ந்து 12-வது நாளாக 10 லட்சத்துக்கும் குறைவான நோயாளிகளே சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளில் சுமார் 77 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக மராட்டியர்கள் மட்டுமே 2.6 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதைப்போல புதிதாக பாதிப்புக்கு உள்ளானவர்களிலும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அடுத்ததாக கேரளாவை சேர்ந்த 9,258 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த மாநிலத்தில் தற்போது தொற்று அதிகரித்து வருவது மாநில அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் மேற்படி 24 மணி நேரத்தில் 11 லட்சத்து 32 ஆயிரத்து 675 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இவற்றையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 7 கோடியே 78 லட்சத்து 50 ஆயிரத்து 403 ஆக அதிகரித்து இருக்கிறது.
Related Tags :
Next Story