வேளாண்மை சட்டங்களால் விவசாயிகள் அடையும் நன்மைகள் என்ன? மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மை சட்டங்களால் விவசாயிகள் அடையும் நன்மைகள் குறித்து மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் வேளாண்மை தொடர்பான 3 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. வேளாண் உற்பத்தி பொருட்களை எங்கு, யாரிடம், எந்த வகையில் (ஆன்லைன் அல்லது நேரில்) எவ்வளவு விலைக்கு விற்பனை செய்ய வேண்டும்? என்பதில் விவசாயிகளுக்கு இருந்த கட்டுப்பாடுகள் தற்போது நீங்கி, அதனை தீர்மானிக்கும் உரிமை விவசாயிக்கு கிடைத்துவிட்டது.
விவசாயம், மாநில அதிகாரப்பட்டியலில் உள்ளது. ஆனால் மாநிலங்களுக்கு இடையே வாங்கவும், விற்கவும் செய்யலாம் என்ற நிலை வரும்போது, அதில் மத்திய அரசின் சட்டம் உள்ளே வருகிறது.
முன்பிருந்த சட்டம் மூலம், அரசின் ஒழுங்குமுறை சந்தைகளில் (ஏ.பி.எம்.சி.) மட்டுமே பொருட்களை விற்க முடியும். இதனால் 8.5 சதவீத வரி செலுத்த வேண்டியிருந்தது. இடைத்தரகர்களுக்கு இதில் பணம் கிடைத்தது.
ஆனால் தற்போதுள்ள நிலவரப்படி, உள்ளூரிலோ, வெளிமாநிலத்திலோ விவசாயிகள் விற்பனை செய்யலாம். சந்தைக்கு வெளியே விற்பனை செய்தால் விவசாயிகள் வரி செலுத்த தேவையில்லை. இதனால் அவர்களுக்கு கூடுதல் விலை கிடைக்கும். வேளாண் சட்டங்கள் வருவதற்கு முன்பு, விளை பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கம் இருந்தது.
இப்போது விவசாயிகளிடம் இருந்து பொருளை விலைக்கு வாங்குவோர் உடனே அதன் விலைக்கான ரசீது வழங்குவதோடு மூன்றில் 2 பாகம் பணத்தையும் செலுத்த வேண்டும். பின்னர் 30 நாட்களுக்குள் மீதித்தொகையையும் கொடுத்து விட வேண்டும். எனவே விவசாயிக்கு பணம் கிடைப்பதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்தம் மூலம் எந்த விவசாய நிலமும், பொருள் கொள்முதல் செய்வோரின் (பெரும் நிறுவனங்கள்) வசம் செல்லாது. வாங்கப்பட்ட பொருளை மதிப்பு கூட்டும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்பதால் பொருள் சேதமும் ஏற்படாது. ஒப்பந்தத்தில் மாற்றங்களை செய்ய மாவட்ட கலெக்டரிடம் முறையிடலாம். கோர்ட்டு அளவுக்கு செல்ல வேண்டிய தேவை எழாது.
கொள்முதல் செய்பவரே விவசாயிகளுக்கு விதைகளை வழங்குவார்கள். வேளாண் நிபுணர்கள் 25 ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை நிறைவேற்றி இருக்கிறோம். இதில் வேளாண்மை அமைப்புகளுடனும் கலந்தாலோசித்தோம்.
குறைந்தபட்ச ஆதார விலை வழங்கும் நடைமுறை தொடரும். முந்தைய ஆட்சி காலத்தில் அது நெல், கோதுமை ஆகியவற்றை சார்ந்தே வழங்கப்பட்டு வந்தது. மற்ற ராகி, கடலை, பருப்பு, எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட 20 பயிர்களுக்கு அது வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையை மாற்றியது பா.ஜ.க. அரசுதான். இதன் மூலம் இறக்குமதி குறைக்கப்பட்டது.
சட்டங்களை அமல்படுத்தும்போது இடையூறாக வரும் ஊழல்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டங்களை எதிர்த்து சாலையில் போராட்டம் நடத்துவோருடன் நிற்பவர்களை கவனிக்கும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது.
பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி இதே வேளாண்மை திருத்தங்களை கொண்டு வருவதாக தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். தற்போது மக்களை ஏமாற்றுகிறார்கள்.
வேளாண் சட்டங்களின் நோக்கம், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என்பதுதான். ஆனால் அவற்றின் மூலம் இடைத்தரகர்கள் மேற்கொண்டு வந்த தொழிலில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கருதுகின்றனர். எனவே விவசாயிகள் பெயரில் நடக்கும் போராட்டங்கள் இவர்கள் மூலமாகவும் இருக்கலாம்.
வேளாண்மை விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது, அதை கொள்முதல் செய்யும் பெரும் நிறுவனங்கள்தான் என்று நீங்கள்தான் நினைக்கிறீர்கள். கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிட்ட பொருளுக்கு நிலவும் விலை, கடந்த 12 மாதங்களில் நிலவிய விலை ஆகியவற்றை மனதில் வைத்தே விலை ஒப்பந்தம் போடப்படும்.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் விலைவாசி உயராது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story