தெலுங்கானாவில் கனமழை: 13 பேர் பலி; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


தெலுங்கானாவில் கனமழை: 13 பேர் பலி; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
தினத்தந்தி 14 Oct 2020 1:12 PM IST (Updated: 14 Oct 2020 1:12 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் பெய்த கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்:

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் சில பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது.

ஹிமாயத் நகர், பஷீர்பாக், நாம்பள்ளி, லக்கி கா புல், மெஹ்திபட்னம், டோலி சவுகி, கச்சிபவுலி, ஜூபிலி ஹில்ஸ் மற்றும் பஞ்சாரா ஹில்ஸ் ஆகிய இடங்களில்  சாலைகளில் மழை நீர் தேங்கி இயல்பு நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை பெய்த மழையால் தெலுங்கானாவில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஐதராபாத்தில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, பாண்ட்லகுடாவில் முகமதிய ஹில்ஸ் பகுதியில் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் நசுங்கி உயிர் இழந்தனர்.

மாநிலத்தில் அதிக மழை பெய்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் தயார் நிலையில்  இருக்குமாறு தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

குமார் அதிகாரிகளுக்கு அனுப்பிய செய்தியில் கூறியதாவது: "மாநிலத்தின் நிலைமை குறித்து முதலமைச்சர் விசாரித்தார். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில் ஐதராபாத்தில் பல பகுதிகளில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. பல விரும்பத்தகாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன."

அக்டோபர் 15 ஆம் தேதி வரை தெலுங்கானாவின் சில பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ஆழ்ந்த காற்றத்தாழ்வு இப்போது மராட்டிய மாநிலத்தை  நோக்கி நகர்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) ஐதராபாத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தெலுங்கானாவின் விகராபாத், சித்திப்பேட்டை மற்றும் ஜாகான் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிக மழை பெய்ததால் மாநில அரசு புதன் மற்றும் வியாழக்கிழமைகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

அக்டோபர் 14 மற்றும் 15 தேதிகளில் திட்டமிடப்பட்ட அனைத்து பரீட்சைகளும்  ஒத்திவைக்கப்படுவதாக உஸ்மானியா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. அக்டோபர் முதல் தேர்வுகள் கால அட்டவணையின்படி நடத்தப்படும் என்றும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் அட்டவணை குறித்து விரைவில் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Next Story