குஜராத்தில் லாரிகள் மோதிய விபத்தில் சிக்கி 5 பெண்கள் உட்பட 11 பேர் பலி


குஜராத்தில் லாரிகள் மோதிய விபத்தில் சிக்கி 5 பெண்கள் உட்பட 11 பேர் பலி
x
தினத்தந்தி 18 Nov 2020 9:03 PM GMT (Updated: 18 Nov 2020 9:03 PM GMT)

குஜராத்தில் லாரிகள் மோதிய விபத்தில் சிக்கி 5 பெண்கள் உட்பட 11 பேர் பலியாகினர்.


வதோதரா, 

குஜராத் மாநிலம் சூரத் மாநகரின் வரச்சா பகுதியை சேர்ந்த சிலர் குடும்பத்துடன், வதோதரா அருகேவுள்ள புகழ்பெற்ற பஞ்ச்மகால் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். இதனையடுத்து ஒரு லாரியில் சில குடும்பத்தினர் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். டிரைவருடன் கிளீனர் ஒருவரும் பயணம் செய்தார்.

நேற்று அதிகாலை 2.45 மணிக்கு வதோதரா அருகேவுள்ள வகோடியா என்ற இடத்தில் லாரி சென்றது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தாறுமாறாக ஓடியது. லாரியில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அனைவரும் அலறினர். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற மற்றொரு லாரி மீது இந்த லாரி பயங்கரமாக மோதியது.

இதில் லாரி அப்பளம் போல நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி லாரியில் பயணம் செய்த 5 பெண்கள் உள்பட 11 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 16 பேரை போலீசார் மீட்டு வதோதராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு டிரைவர் உள்ளிட்ட 16 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் டிரைவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்து குறித்து அறிந்த முதல்வர் விஜய் ரூபானி, காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதுதொடர்பாக பிரதமர்மோடி தனது டுவிட்டரில், “விபத்தில் அன்பானவர்களை இழந்து தவிப்போருக்கு, ஆறுதல் கூறுகிறேன். காயமடைந்தோர் விரைவில் மீண்டு வர இறைவனை வேண்டுகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். 

இதேபோல் காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது டுவிட்டரில், “காயமடைந்தோருக்கு தேவையான உதவிகளை, அதிகாரிகள் விரைந்து வழங்க வேண்டும். அங்குள்ள காங்கிரஸ் கட்சியினரும், தேவையான உதவிகளை செய்ய வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார். 

Next Story