இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.69 சதவீதமாக உயர்வு


இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.69 சதவீதமாக உயர்வு
x
தினத்தந்தி 22 Nov 2020 5:59 AM GMT (Updated: 22 Nov 2020 5:59 AM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 93.69 சதவீதமாக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 209 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. இதன் மூலம்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90 லட்சத்து 95 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.

இதில் நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் 43,493 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 85,21,617 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 93.69 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றிற்கு தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 962 ஆக உள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.85 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 12-வது நாளாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 501 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 227ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவில் உயிரிழப்பு 1.46 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக டெல்லியில் 111 பேரும், மராட்டியத்தில் 62 பேரும், மே.வங்கத்தில் 53 பேரும், உ.பி.யில் 20 பேரும், அரியாணா, கேரளாவில் தலா 25பேரும், உத்தரப்பிரதேசத்தில் 24 பேரும், பஞ்சாப்பில் 23 பேரும், சத்தீஸ்கரில் 22 பேரும், கர்நாடகாவில் 20 பேரும் உயிரிழந்தனர்.

ஐசிஎம்ஆர் அறிக்கையின்படி, இதுவரை நாட்டில் 13.07 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் நேற்று மட்டும் 10 லட்சத்து 75 ஆயிரத்து 326மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி கொரோனா பாதிப்பு 20 லட்சத்தையும், 23-ம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5-ம் தேதி 40 லட்சத்தையும் எட்டியது. செப்டம்பர் 16-ம் தேதி 50 லட்சத்தையும், 28-ம் தேதி 60 லட்சத்தையும், அக்டோபர் 11-ம் தேதி 70 லட்சத்தையும் தொட்டது. 29-ம் தேதி 80 லட்சத்தைக் கடந்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story