கொரோனா பாதித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. காலமானார்


கொரோனா பாதித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. காலமானார்
x
தினத்தந்தி 30 Nov 2020 2:37 AM GMT (Updated: 30 Nov 2020 2:37 AM GMT)

கொரோனா பாதித்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. அரியானா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் காலமானார்.

குருகிராம்,

ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. கிரண் மகேஸ்வரி.  இவருக்கு கடந்த சில நாட்களுக்க முன் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் அதில் பலனின்றி அவர் காலமானார்.  அவருக்கு வயது 59.

கடந்த 1994ம் ஆண்டு நடந்த நகராட்சி கவுன்சிலில் வெற்றி பெற்று தலைவரான கிரண் அதுமுதல் கடந்த 1999ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் மேயர் பொறுப்பில் இருந்துள்ளார்.  பா.ஜ.க.வில் ராஜஸ்தான் பிரதேச மகளிர் அணியின் தலைவராக கடந்த 2000ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

இதன்பின்னர் கடந்த 2006ம் ஆண்டு மகளிர் அணி தேசிய தலைவராகவும், கடந்த 2011ம் ஆண்டு அக்கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 14வது மக்களவை தேர்தலில் உதய்பூர்-ராஜ்சமந்த் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யானார்.  அரசின் துறை சார்ந்த பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2013ம் ஆண்டு ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார்.  பா.ஜ.க. தேசிய துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.  இந்த நிலையில், கொரோனா தொற்றால் மரணம் அடைந்த கிரணுக்கு சத்ய நாராயண் என்ற கணவரும், ஒரு மகனும் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர.

Next Story