விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என ஒருபோதும் கூறமாட்டேன்; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா


விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என ஒருபோதும் கூறமாட்டேன்; மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா
x
தினத்தந்தி 30 Nov 2020 4:35 AM GMT (Updated: 30 Nov 2020 4:35 AM GMT)

விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்று ஒருபோதும் கூறியதில்லை, கூறவும் மாட்டேன் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் விவசாயிகளின் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது.  இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.  இதன் ஒரு பகுதியாக வடபகுதியில் உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்வது என முடிவெடுத்தனர்.

இதன்படி, கடந்த 26ந்தேதி காலை டெல்லி சலோ (டெல்லி நோக்கி செல்லும் பேரணி) தொடங்கியது.  இதற்காக விவசாயிகள், லாரிகள், டிராக்டர்கள் மற்றும்
கால்நடையாக நடந்து, பல குழுக்களாக பிரிந்து பேரணியில் கலந்து கொண்டனர்.

எனினும் இந்த பேரணி அரசியல் உள்நோக்கம் கொண்டது என சிலரால் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.  இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது என்று ஒருபோதும் கூறியதில்லை, அப்படி ஒருபோதும் கூறவும் மாட்டேன் என கூறினார்.

அவர் தொடர்ந்து கூறும்பொழுது, விவசாயிகளின் போராட்டத்திற்கு பஞ்சாப் அரசு அனுமதி அளித்திருக்க கூடாது என்ற அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டாரின் கருத்து ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார்.

ஐதராபாத்தை நிஜாம் கலாசாரத்திலிருந்து விடுவித்து, ஜனநாயக கொள்கைகளுடன் நவீன நகராக உருவாக்குவோம் என்றும் அமித்ஷா கூறினார்.

வேளாண் அமைப்புகளுடன் வருகிற டிசம்பர் 3ந்தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் கூறினார்.  விவசாயிகளின் ஒவ்வொரு பிரச்னையையும் மற்றும் கோரிக்கையையும் பற்றி பேச அரசு தயார் என போராட்டக்காரர்களுக்கு அமித்ஷா உறுதி கூறினார்.

பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசும்பொழுது, நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறிய வேளாண் சீர்திருத்த சட்டங்கள், விவசாயிகளுக்கான தடைகளை உடைத்தது மட்டுமின்றி, அவர்களுக்கான புதிய உரிமைகள் மற்றும் வாய்ப்புகளையும் வழங்கி உள்ளன என கூறினார்.

இதனை தொடர்ந்து, மத்திய மந்திரி அமித்ஷாவின் பேச்சுவார்த்தை அழைப்பினை ஏற்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மறுப்பு தெரிவித்து விட்டனர்.

Next Story