தலைநகரில் போராட்டம் வலுக்கிறது; டெல்லி-நொய்டா சாலையில் விவசாயிகள் இன்று மறியல்
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், டெல்லி-நொய்டா சாலையில் இன்று (புதன்கிழமை) மறியலில் ஈடுபட விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் முற்றுகை போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அடுத்தகட்ட போராட்டங்களை நோக்கி விவசாயிகள் நகர்ந்து வருகின்றனர். அந்த வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் ஒருநாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி டெல்லி-நொய்டா சாலையில் அமைந்துள்ள சில்லா எல்லையில் இன்று (புதன்கிழமை) மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.
ஏற்கனவே விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்டிருந்த சில்லா எல்லை, சமீபத்தில் மீண்டும் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. அந்த சாலையை மீண்டும் மூடப்போவதாக விவசாயிகள் அறிவித்திருப்பதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
தங்கள் போராட்டம் குறித்து சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய அமைப்பு தலைவர் ஜக்தீத் தல்லேவால், ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெறமாட்டோம் என அரசு கூறுகிறது. ஆனால் அவற்றை திரும்ப பெற வைப்போம் என நாங்கள் கூறுகிறோம். என்ன நடந்தாலும் இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவது என்ற கட்டத்தை எட்டிவிட்டோம். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயங்கவில்லை. ஆனால் எங்கள் கோரிக்கையை கேட்பதுடன், உறுதியான பரிந்துரையுடன் அரசு வர வேண்டும்’ என தெரிவித்தார்.
இந்த நிலையில், டெல்லி போராட்டத்தில் இதுவரை உயிரிழந்த 20 விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தினமாக 20-ந் தேதியை கடைப்பிடிக்க இருப்பதாக விவசாயிகள் அறிவித்து உள்ளனர். டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் நேற்று 20-வது நாளை எட்டியது. சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளை ஆக்கிரமித்துள்ள விவசாயிகள் தங்களின் போராட்டத்தை புதியதொரு வாழ்க்கை முறையாகவே வரித்துக்கொண்டு உள்ளனர்.
செய்தித்தாள்கள் வாசிப்பது, வழிபாடுகள் நடத்துவது, சமூக சமையலறைகளில் ‘சேவை’யாற்றுவது என அன்றாட கடமைகளையும் போராட்டக்களத்திலேயே நிறைவேற்றி வருகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷமிடுவது, மற்ற நேரங்களில் இந்த சட்டங்களால் விளையும் தீமைகள் குறித்து உரையாற்றுவது, அவற்றை கேட்பது என போராட்ட பாதையை வகுத்துள்ளனர்.
Related Tags :
Next Story