வங்காளதேச பிரதமருடன் மோடி பேச்சு - 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து


வங்காளதேச பிரதமருடன் மோடி பேச்சு - 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
x
தினத்தந்தி 17 Dec 2020 7:14 PM GMT (Updated: 17 Dec 2020 7:14 PM GMT)

வங்காளதேசம்-இந்தியா இடையே 55 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரெயில்தடம் தொடங்கி வைக்கப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையேயான நட்புறவு வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தருணத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் இணையவழி உச்சி மாநாட்டில் நேற்று சந்தித்து பேசினார்கள்.

இந்தியா, பாகிஸ்தானுடன் 1971-ம் ஆண்டு போர் தொடுத்து, அதன் பலனாக வங்காளதேசம் உருவானது. அந்தப்போர் வெற்றியின் 50-வது ஆண்டு வெற்றி தினத்தை இந்தியாவும், வங்காளதேசமும் நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில், இந்த உச்சி மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுபற்றி வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவிடம் பேச்சுவார்த்தையின் தொடக்கத்திலேயே பிரதமர் மோடி குறிப்பிட்டார். அப்போது அவர், “விடுதலை எதிர்ப்பு சக்திகளுக்கு எதிரான வங்காளதேசத்தின் வரலாற்று வெற்றியை கொண்டாடுவது எங்களுக்கு பெருமிதம் அளிக்கிறது. இன்று வங்காளதேசம் தனது 49-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், விடுதலைப்போரில் உயிர்நீத்த நம் இரு நாட்டு படை வீரர்களுக்கும் மரியாதை செலுத்துகிறேன்” என குறிப்பிட்டார்.

வங்காளதேசத்தின் நிறுவனர் முஜிபுர் ரகுமான், இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்தி ஆகிய இரு பெரும் தலைவர்களின் வாழ்க்கையை கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ள டிஜிட்டல் கண்காட்சியை பிரதமர் மோடியும், ஷேக் ஹசினாவும் தொடங்கி வைத்தனர்.

1965-ம் ஆண்டு நடந்த இந்தியா, பாகிஸ்தான் போருக்கு பின்னர், சிலாஹதி-ஹல்திபாரி ரெயில் பாதை துண்டிக்கப்பட்டது. இப்போது 55 ஆண்டுகள் ஆன நிலையில், இந்தியா, வங்காளதேசம் ஆகிய இரு நாடுகளின் எல்லைகளை இணைக்கிற இந்த ரெயில்பாதையை புதிப்பித்து இரு தலைவர்களும் தொடங்கி வைத்தனர்.

இதனால் இரு தரப்பு சரக்கு போக்குவரத்துக்கு வழி பிறக்கும். இரு தரப்பிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திய உடன் பயணிகள் ரெயில் சேவையும் தொடங்கும்.

பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் பேசும்போது, “நான் பதவி ஏற்ற நாளில் இருந்து இந்தியா, வங்காளதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கும், ஆழப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளித்து வந்துள்ளேன். கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்திலும் இரு தரப்பு ஒத்துழைப்பு நன்றாக இருந்தது. கொரோனாவால் இது ஒரு சவாலான ஆண்டாக அமைந்தது. ஆனால் இந்த கடினமான தருணத்திலும் இரு தரப்பிலும் நல்லதொரு ஒத்துழைப்பு இருந்தது திருப்தி அளிக்கிறது. தடுப்பூசி துறையிலும் நல்ல ஒத்துழைப்பை பெற்றிருக்கிறோம். இதில் உங்கள் தேவைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்” என கூறினார்.

அடுத்த ஆண்டு தன்னை வங்காள தேசத்துக்கு வருமாறு ஷேக் ஹசினா அழைத்ததற்கு பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “வங்கபந்துவுக்கு (முஜிபுர் ரகுமானுக்கு) உங்களுடன் வந்து அஞ்சலி செலுத்துவது எனக்கு பெருமை சேர்க்கும். எங்கள் அண்டை நாட்டு உறவுகொள்கையில் வங்காளதேசம் முக்கிய தூணாக உள்ளது” என்று கூறினார்.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா கூறும்போது, இந்தியா எங்களது உண்மையான நட்பு நாடு என வர்ணித்தார். கொரோனா வைரஸ் நெருக்கடியை இந்தியா கையாண்ட விதத்தையும் அவர் பாராட்டினார். மேலும் தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உலக பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

சார்க் என்னும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பில் வங்காளதேசத்தின் பங்களிப்புக்காக ஷேக் ஹசினாவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இந்த இணையவழி உச்சிமாநாட்டின்போது, இரு தரப்புக்கும் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இவை, ஹைட்ரோகார்பன், விவசாயம், ஜவுளி உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை வழங்க வகை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story