கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Dec 2020 12:12 AM GMT (Updated: 19 Dec 2020 12:12 AM GMT)

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு விரிவான உத்தரவை பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை, இறந்துபோன கொரோனா நோயாளிகளின் உடல்களை கண்ணியமாக கையாளுதல், அடக்கம் செய்தல் தொடர்பாக தாமாக முன்வந்து பதிவுசெய்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இவ்விவகாரத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

அனைத்து தீ தடுப்பு நடவடிக்கைகளையும் உறுதிசெய்ய ஒவ்வொரு கொரோனா மருத்துவமனையிலும் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த நடவடிக்கைகளை மாதந்தோறும் ஆய்வுசெய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தீ தடுப்பு ஆய்வுக் குழுவை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும். தீயணைப்புத்துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெறாத, தடையில்லா சான்றை புதுப்பிக்காத மருத்துவமனைகளை கண்டறிந்து, சான்று பெற நடவடிக்கைகளை மேற்கொள்ள அவற்றுக்கு மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும்.

கொரோனா போரை வெல்வதற்கு அரசு-பொதுமக்கள் கூட்டு அவசியமாகிறது. கொரோனாவுக்கு அனைவரும் போதுமான சிகிச்சை பெறும்வகையில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த வேண்டும். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் முறைப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்புக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டும், அவற்றை அமல்படுத்தாதன் காரணமாக இந்நோய் காட்டுத்தீயாக பரவி வருகிறது. எனவே, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொற்றை தடுக்க மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து விழிப்புடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும். பொதுமக்களும் தமது கடமைகளை உணர்ந்து கட்டுப்பாடு விதிகளை மதித்து நடக்க வேண்டும். பொது இடங்களில் முககவசம் அணியாமல் இருப்பதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பிற உயிர்களுடன் விளையாடுவதையும் அனுமதிக்கக் கூடாது.

கொரோனா தடுப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் அமலாக்கப்படுவதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உதவியுடன் மாநிலங்களின் உள்துறை கூடுதல் தலைமைச்செயலாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்தாலும், அவற்றை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

ஓட்டல்கள், காய்கறி சந்தைகள், பஸ் நிலையம், ரெயில் நிலையங்கள் போன்ற மக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் அதிக எண்ணிக்கையிலான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். தேவையற்ற நிகழ்ச்சிகளுக்கு போலீஸ் அனுமதி அளிக்கக்கூடாது. அனுமதியுடன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்களை போலீசார் ஆராயவேண்டும். கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பிக்கும்போது, தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் உள்ள 50 சதவீதம் அல்லது அரசு தெரிவிக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் இலவச படுக்கைகளை ஒதுக்கித்தர வேண்டும்.

தனியார், கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொரோனா குறித்து அறிந்துகொள்ள இலவச உதவி எண்களை அறிவிக்க வேண்டும். வார இறுதிநாள்களிலும், இரவு நேரங்களிலும் ஊரடங்கு அமல்படுத்துவதை மாநில அரசுகள் ஆராய வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படும் ஊரடங்கு குறித்த விவரங் களை பொதுமக்களுக்கு முன்னரே தெரியப்படுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு உரிய ஓய்வு, விடுப்பு அளிக்கும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும். தேர்தல் பேரணி, பொதுக்கூட்டங்கள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடைபெற வேண்டும். இவற்றை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க உரிய அறிவிப்புகளை மாநில அரசுகள் வெளியிட வேண்டும்.

இந்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மாநில அரசுகள் 4 வாரங்களுக்குள் பிரமாணபத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்கள் கழித்து பட்டியலிட உத்தரவிடுகிறோம்.

Next Story