200 தொகுதிகளை பெற தவறினால் பதவி விலக தயாரா? பா.ஜ.க. தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் சவால்


200 தொகுதிகளை பெற தவறினால் பதவி விலக தயாரா? பா.ஜ.க. தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் சவால்
x

200 தொகுதிகளை பெற தவறினால் பா.ஜ.க. தலைவர்கள் தங்களுடைய பதவிகளில் இருந்து விலக தயாரா? என பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  மேற்கு வங்காள சட்டசபைக்கு வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற கூடும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 18ந்தேதி இரவு இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றார்.

மேற்கு வங்காள மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவரது மந்திரிசபையில் இருந்து மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி, தனது மந்திரி, எம்.எல்.ஏ. பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்து கட்சியில் இருந்தும் விலகினார்.

இந்த சூழலில், அவர் கடந்த 19ந்தேதி நடந்த பொது கூட்டமொன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

அவருடன் தபசி மண்டல், அசோக் திண்டா, சுதீப் முகர்ஜி, சாய்கத் பஞ்சா, சில்பத்ரா தத்தா, தீபாலி பிஸ்வாஸ், சுக்ர முண்டா, சியாமபாத முகர்ஜி, பிஸ்வஜித் குந்து மற்றும் பன்சாரி மைத்தி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

இதேபோன்று திரிணாமுல் காங்கிரசின் புர்பா புர்த்வான் தொகுதியை சேர்ந்த எம்.பி. சுனில் மண்டல் மற்றும் முன்னாள் எம்.பி. தசரத திர்க்கே ஆகியோரும் பா.ஜ.க.வில் இணைந்தனர்.  இதன்பின்னர் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என உறுதிப்பட கூறினார்.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமருக்கான பிரசார யுக்திகளை நரேந்திர மோடிக்கு வகுத்து கொடுத்த அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர், அடுத்த ஆண்டு மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிஸ் வெற்றி பெறுவதற்கான பணியில் மம்தா பானர்ஜியால் அவர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்.

அவர் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. இரட்டை இலக்கங்களை பெறுவதற்கே போராட வேண்டும்.  100 தொகுதிகளுக்கு குறைவாகவே அக்கட்சி கைப்பற்றும்.  அப்படி இல்லையெனில், எனது அரசியல் பணியில் இருந்து நான் வெளியேறுவேன் என கூறினார்.

இந்த நிலையில், 200 தொகுதிகளை பா.ஜ.க. பெற தவறினால் அக்கட்சி தலைவர்கள் தங்களது பதவிகளில் இருந்து வெளியேறுவோம் என அதிகாரப்பூர்வ முறையில் உறுதியளிக்க தயாரா? என்று கிஷோர் சவால் விடுத்து பேசியுள்ளார்.

Next Story