விவசாயிகளுக்கான நிதியுதவி: அடுத்த தவணையை மோடி இன்று வழங்குகிறார்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Dec 2020 12:30 AM GMT (Updated: 24 Dec 2020 9:35 PM GMT)

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் அடுத்த தவணையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்

புதுடெல்லி, 

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (பி.எம்.-கிசான்) திட்டத்தின்கீழ், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) காணொலி வாயிலாக தொடங்கிவைக்கிறார்.

இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மோடி ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், 9 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி, பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த நிகழ்வின்போது, 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடுவார். அப்போது பி.எம்.கிசான் திட்டம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்பான தங்கள் அனுபவங்களை விவசாயிகள் பகிர்ந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் தொடரும் நிலையில் இந்த நிகழ்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Next Story