‘அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்த தயார்’ - விவசாயிகளுக்கு மத்திய அரசு மீண்டும் அழைப்பு


‘அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்த தயார்’ - விவசாயிகளுக்கு மத்திய அரசு மீண்டும் அழைப்பு
x
தினத்தந்தி 25 Dec 2020 12:48 AM GMT (Updated: 25 Dec 2020 12:48 AM GMT)

டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்து உள்ளது. அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்த தயார் என்று அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் போராடி வருகின்றனர்.

சுமார் 40 அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் சுமார் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மத்திய அரசு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்த சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிவுற்றன. 6-ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்பட்டது.

எனினும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு அரசு அழைப்பு விடுத்து வருகிறது. குறிப்பாக இது தொடர்பாக கடந்த 20-ந்தேதி விவசாய அமைப்பு தலைவர்களுக்கு மத்திய வேளாண் துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால் உறுதியான பரிந்துரைகள் இருந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என விவசாயிகள் நேற்று முன்தினம் பதில் கடிதம் எழுதியுள்ளனர். இந்த சட்டங்களில் திருத்தம் மேற்கொள்வதிலேயே அரசு நிலையாக இருப்பது அர்த்தமற்றது எனவும் விவசாயிகள் அதில் கூறியிருந்தனர்.

விவசாயிகளின் இந்த கடிதத்துக்கு வேளாண் துறை இணை செயலாளர் விவேக் அகர்வால் நேற்று பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அவர் அழைப்பு விடுத்து இருந்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

வேளாண் சட்டங்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க அரசு திறந்த மனதுடன் தயாராக இருக்கிறது. எனவே பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் நான் அழைப்பு விடுக்கிறேன். அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக ஒரு நாளும் நேரத்தையும் தயவுகூர்ந்து அறிவியுங்கள்.

குறைந்தபட்ச ஆதரவு விலையை பொறுத்தவரை, வேளாண் சட்டங்களுக்கும் விலை வரம்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அல்லது நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொள்முதல் செய்வதில் எந்த தாக்கத்தையும் இந்த சட்டங்கள் ஏற்படுத்தாது. இதை ஒவ்வொரு பேச்சுவார்த்தையின்போதும், விவசாய அமைப்புகளிடம் கூறியிருக்கிறோம். அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி அளிக்கவும் அரசு தயாராக உள்ளது.

எனவே வேளாண் சட்ட வரம்புக்குள் வராத குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பான எத்தகைய கோரிக்கையும் தர்க்க ரீதியாக சரியானது அல்ல. அரசு ஏற்கனவே அறிவித்தது போல, விவசாய அமைப்புகள் எழுப்பியிருக்கும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. இதில் தர்க்கரீதியான தீர்வு காண்பதற்கு அரசு தயாராக இருக்கிறது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் நேற்று 29-வது நாளாக நடந்தது. டெல்லியில் நேற்று பல இடங்களில் 4.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் குறைந்தபட்ச வெப்பநிலை இருந்தது. அதைப்போல 100 மீட்டருக்கு அப்பால் உள்ள பொருட்களை பார்க்க முடியாத அளவுக்கு காலையில் பனிமூட்டமும் நிலவியது.

ஆனால் இவற்றை பொருட்படுத்தாமல் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக தீவிர போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் சிங்கு, காஜிப்பூர், திக்ரி போன்ற எல்லைப்பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது. அங்கு பாதுகாப்பு பணிகளை டெல்லி போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதைப்போல விவசாயிகளின் போராட்டத்தால் தொடர்ந்து சாலைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து டெல்லி வாசிகளுக்கு போலீசார் தினமும் அறிவித்து வருகின்றனர். மாற்று வழிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகின்றனர்.


Next Story