தமிழக சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்: மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்


தமிழக சட்டசபை தேர்தல்; பா.ஜ.க. அமோக வெற்றி பெறும்:  மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்
x
தினத்தந்தி 25 Dec 2020 11:52 AM GMT (Updated: 25 Dec 2020 11:52 AM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது.  கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு விடாமல் இருக்கும் வகையில் தேர்தலை முன்னெச்சரிக்கையாக நடத்துவதற்கான சூழலை தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.  இதன் ஒரு பகுதியாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் சென்னையில் உள்ள கமலாலயத்திற்கு இன்று வருகை தந்துள்ளார். 

அவரது முன்னிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளராக இருந்த அருணாச்சலம் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளார்.  இதனை தொடர்ந்து கட்சியினர் முன் மத்திய மந்திரி ஜவடேகர் பேசும்பொழுது, தமிழக மக்கள் வளர்ச்சியையே எதிர்பார்க்கின்றனர்.  

அவர்கள் மலிவான குடும்ப அரசியலை வெறுக்கிறார்கள்.  நாடு முழுவதும் நடைபெறும் தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு மாபெரும் வெற்றி கிடைத்து வருகிறது.  ஆனால், காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து வருகிறது.

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என கூறியுள்ளார்.  தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க.வில், மாநில துணைத்தலைவராக உள்ள அண்ணாமலை, முதல் அமைச்சர் வேட்பாளர் பற்றிய அறிவிப்பு தேர்தல் நேரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ள சூழலில் மத்திய மந்திரி ஜவடேகர் மேற்கூறியபடி பேசியுள்ளார்.

Next Story