அரசியலில் சேரக் கோரி கங்குலிக்கு கடும் நெருக்கடி; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குற்றச்சாட்டு


அரசியலில் சேரக் கோரி கங்குலிக்கு கடும் நெருக்கடி;  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Jan 2021 8:26 AM GMT (Updated: 4 Jan 2021 8:26 AM GMT)

அரசியலில் சேரக் கோரி கங்குலிக்கு கடும் நெருக்கடி அளிக்கப்படுவதாக அசோக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தா,

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை அரசியலில் சேரக் கோரி அதிகமான நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் மாரடைப்பு வந்திருக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு சனிக்கிழமை காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, கொல்கத்தாவில் உள்ள உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டார். கங்குலிக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், அரசியலில் இணைய வலியுறுத்தி கங்குலிக்கு கடும் நெருக்கடி அளிக்கப்படுவதாக மேற்கு வங்காளத்தை சேர்ந்த  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அசோக் பட்டாச்சார்யா கூறுகையில், “  கங்குலி அரசியலில் இணைய வேண்டும் என்று அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.  அரசியல் ரீதியாக கங்குலியைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். இது கங்குலிக்குப் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.

கங்குலியை அரசியலில் சேரக் கூறி அழுத்தம் கொடுக்கக் கூடாது. கடந்த வாரம் கங்குலி என்னிடம் பேசியபோதுகூட நான் அவரிடம், அரசியலுக்கு வராதீர்கள், அரசியலில் சேரக்கூடாது எனத் தெரிவித்தேன். அதற்கு கங்குலி என் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை” என்றார். 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்காள பாஜக தலைவர் திலிப் கோஷ், சிலர் எல்லாவற்றிலும் அரசியலை பார்க்கின்றனர். அவர்களின் மோசமான மனநிலையே இதற்கு காரணம்.  கங்குலியின் லட்சக்கணக்கான ரசிகர்களை போலவே நாங்களும் அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என்றே விரும்புகிறோம்” என்றார். 

Next Story