கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை உலகில் 29 நாடுகள் தொடங்கியுள்ளன. இந்தியா பின்தங்குகிறதா...?


கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை உலகில் 29  நாடுகள் தொடங்கியுள்ளன.  இந்தியா பின்தங்குகிறதா...?
x
தினத்தந்தி 4 Jan 2021 5:33 PM GMT (Updated: 4 Jan 2021 5:33 PM GMT)

உலகில் 29 நாடுகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை தொடங்கியுள்ளன. விரைவில் இந்தியாவில் தடுப்பூசி செயல்முறை தொடங்க உள்ளது

புதுடெல்லி:

கொரோனாவால் உலகமே பாதிக்கபட்டு உள்ள நிலையில் . மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பணிகள்  உலகின் பல நாடுகளிலும்  தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பூசி திட்டத்தை 29  நாடுகள் தொடங்கியுள்ளன.  சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே தங்கள் குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளன.வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பெரும்பகுதிகளில் தொடங்கியுள்ளது; மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்காவில் சில நாடுகள்; மற்றும் ரஷியா ஆகியவை தொடங்கி உள்ளன.

இந்தியாவில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு  தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்த பின்னர் தடுப்பூசி செயல்முறை தொடங்க உள்ளது. 2021ஆம் ஆண்டின் மத்திக்குள், இந்தியா 30கோடி  பேருக்கு கொரோனா தடுப்பு மருந்தை வழங்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது. 

உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி வழங்கும் தரவுகளை 'அவர் வேர்ல்ட் இன் டேட்டா' என்கிற அமைப்பு ஒருங்கிணைக்கிறது.எத்தனை மக்கள் கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸைப் பெற்றிருக்கிறார்கள் என இந்த அமைப்பு கணக்கிடுகிறது.

அமெரிக்கா 2020-ம் ஆண்டுக்குள் 2 கோடி  மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் கடந்த டிசம்பர் 30-ம் தேதி நிலவரப்படி, வெறும் 27.8  லட்சம் மக்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசியை வழங்கியிருக்கிறது.

இதுவரை, 29 நாடுகளில் 1.08 கோடிக்கும் அதிகமான  டோஸ்கள் போடப்பட்டு உள்ளன . இதில் 45  லட்சத்துக்கும்  அதிகமான தடுப்பூசிகளுடன் சீனா முன்னிலை வகிக்கிறது. 86.5 லட்சம்  மக்கள்தொகை கொண்ட இஸ்ரேல், ஏற்கனவே அதன் மக்கள்தொகையில் 12 சதவீதத்துக்கும்   அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்குவதில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உடன் ஒப்பிடும் போது, ஐரோப்பிய ஒன்றியம் தாமதப்படுத்திவிட்டது. 

உலகில் முதன்முதலில்  சீனா தான் தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.  அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. தடுப்பூசிகளின் சோதனைகள் மற்றும் செயல்திறன் தகவல்களை சீனா ரகசியமாக வைத்து கொண்டது. அத்தியாவசிய தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு சீனா ஜூலை மாதம் தனது தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியது. பிப்ரவரி நடுப்பகுதியில் 5 கோடிக்கும்  அதிகமான மக்களுக்கு தடுப்பூசி போட சீனா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தில்  அவசரகால பயன்பாட்டிற்கு ஃபைசர் / பயோஎன்டெக் தடுப்பூசி ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி  தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது.  ஒரு புதிய திரிபு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து வைரஸ் மீண்டும் அழிவை ஏற்படுத்திய இங்கிலாந்து, ஜனவரி 1 வரை  10 லட்சத்துக்கும்  அதிகமான தடுப்பூசி டோஸ்களை பயன்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தனது மக்கள் தொகையில் 12 சதவீதம் தடுப்பூசி வழங்கி உள்ளது.தடுப்பூசி டோஸ்களின் அளவுகளின் எண்ணிக்கை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் சமமாக இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளில் பெரும்பாலானவை தடுப்பூசி செயல்முறையை முடிக்க இரண்டு அளவுகள் தேவைப்படுகின்றன.

பிரான்ஸில் கொரோனா தடுப்பு மருந்து குறித்து மக்களுக்கு ஒரு வித சந்தேகம் நிலவி வருகிறது. 'இப்சாஸ் குளோபல் அட்வைசர்' என்கிற அமைப்பு 15 நாட்டு மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பிரான்ஸ் மக்களில், 40% பேர் மட்டுமே கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறியிருக்கிறார்கள்.

சீனாவில் 80 சதவீதம், பிரிட்டனில் 77சதவீதம், அமெரிக்காவில் 69சதவீதம் மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.

Next Story