வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே


வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசு தயாராக உள்ளது - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
x
தினத்தந்தி 10 Jan 2021 10:13 AM GMT (Updated: 10 Jan 2021 10:13 AM GMT)

விவசாய சங்க தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்று பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 46வது நாளாக நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 8 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

எனினும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. கடந்த 4-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து, வருகிற 15ந்தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்பு கொண்டுள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதற்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு முழுமையாக பரிசீலிக்கும் என்று உறுதியளித்தார். மேலும் வேளாண்துறை அமைச்சருடன் விவசாயிகள் நடத்தவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாயிகளின் நில உரிமைகளை வேளாண் சட்டங்கள் பாதுகாக்கும் என்று கூறினார்.

வேளாண் சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் மத்திய அரசிடம் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தால் அதனை ஏற்றுக்கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

Next Story