1 கோடியே 10 லட்சம் டோஸ் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி கொள்முதல்; மத்திய அரசு நடவடிக்கை


1 கோடியே 10 லட்சம் டோஸ் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி கொள்முதல்; மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Jan 2021 9:43 PM GMT (Updated: 11 Jan 2021 9:43 PM GMT)

முன்கள பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு செலுத்துவதற்காக, 1 கோடியே 10 லட்சம் டோஸ் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.

புதுடெல்லி, 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியையும், ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த ‘கோவேக்சின்’ தடுப்பூசியையும் இந்தியாவில் பயன்படுத்த மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான 2 கட்ட ஒத்திகைகளும் நடந்து முடிந்துள்ளன.  வருகிற 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் அடுத்தகட்டமாக ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரித்து வருகிறது.அந்த நிறுவனத்திடம் 1 கோடியே 10 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான ஆர்டரை மத்திய அரசு நேற்று அளித்தது. மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் எச்.எல்.எல். லைப்கேர் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனம் இந்த ஆர்டரை அளித்தது.

ஒரு டோஸ் தடுப்பூசி விலை ரூ.200 ஆகும். ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து ரூ.210 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. நேற்று மாலையே தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் அனுப்ப தொடங்கி விட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தடுப்பூசிகள், முதலில் 60 வினியோக மையங்களுக்கு நேரடியாக கொண்டு செல்லப்படும். பின்னர், அங்கிருந்து மற்ற இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுபோல், ‘கோவேக்சின்’ தடுப்பூசியை கொள்முதல் செய்வதற்கான ‘ஆர்டர்’ விரைவில் பிறப்பிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன.


Next Story