வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Jan 2021 8:42 AM GMT (Updated: 12 Jan 2021 8:42 AM GMT)

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை நேற்றைய தேதிக்கு தள்ளி வைப்பதாக கூறினர். மத்திய அரசும் ஒப்புக்கொண்டது. ஆனால், கடந்த 7ந்தேதி நடந்த மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையிலான 8வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தநிலையில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.  இவற்றின் மீது நடந்த விசாரணையில், வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது என்றும், விவசாயிகளுடனான பேச்சு திருப்தி அளிக்கவில்லை என்றும், மத்திய அரசின் நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது. மேலும் வேளாண் சட்டங்களை நிறுத்திவைக்க நேரிடும் என்றும் எச்சரிக்கையும் விடுத்தது.

இந்நிலையில், டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டங்களை நிறுத்த கோரிய மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

விவசாயிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எல். சர்மா, கோர்ட்டு அமைக்கும் குழு முன்பு ஆஜராக முடியாது என விவசாயிகள் கூறியுள்ளனர் என நீதிமன்றத்தில் கூறினார். இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறும்பொழுது, சட்டங்களையும் மதிக்க வேண்டியது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். போராட்டங்களால் பாதிக்கப்படும் குடிமக்களின் வாழ்வு மற்றும் உடைமைகள் ஆகியவற்றையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

எங்களுக்குள்ள அதிகாரங்களுக்கு உட்பட்டு விவகாரங்களை தீர்க்க நாங்கள் முயல்கிறோம். அவற்றில் ஒன்று சட்டங்களுக்கு தற்காலிக தடை விதித்து, குழு அமைப்பது. இந்த குழு எங்களுக்கானது. விவகாரம் தீர்க்கப்பட வேண்டும் என விரும்புபவர்கள் குழுவுக்கு செல்லலாம். இந்த குழு உத்தரவுகளை பிறப்பிக்கவோ அல்லது உங்களை தண்டிக்கவோ செய்யாது. அறிக்கையை மட்டுமே எங்களிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் குழு அமைக்கப்படும் என்றும், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் விவசாயிகள் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 

இதனிடையே வேளாண் சட்ட பிரச்னைகளை தீர்க்க குழு அமைக்கும் உச்ச நீதிமன்றத்தின் முடிவை மத்திய அரசு வரவேற்றுள்ளது.

Next Story